திருக்குற்றாலக் குறவஞ்சி திரிகூட ராசப்பக் கவிராயர் பாடல் - 1 வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார் கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும் செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும் கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர் குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே 1) ஆண் குரங்குகள் பல்வகைப் பழங்களைப் பறித்துக் கொடுத்துப் பெண் குரங்குகளோடு தழுவும் ; அக் குரங்குகளால் சிதறியெறியப்படுகின்ற பழங்களை வானுலகத்தில் வாழும் தேவர்கள் இரந்து இரந்துவேண்டிக் கேட்பார்கள் , வனவேடர்கள் தம் கண்களால் ஏறெடுத்துப் ) பார்த்து உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள் ; வானின் வழியாகச் செல்கின்ற சித்தர்கள் கீழிறங்கி வந்து காயசித்தி மருந்துகளாகிய வன மூலிகைகளை வளர்ப்பார்கள் ; தேன் கலந்த மலையருவியினது...