உலக ஒற்றுமைக்கு வழிகாட்டியவர்கள் தமிழர்கள் சாமி சிதம்பரனார் உலகப் போக்கு “ நாம் தனித்தே வாழ்கின்றோம் . நமக்குப் பிறர் உதவி வேண்டியதேயில்லை . நம்முடைய அறிவு , நம்முடைய திறமை , நம்முடைய உடல் வன்மை நமக்குத் துணை செய்கின்றன ” என்று சிலர் - ஏன் - பலர் நினைக்கலாம் ; பேசலாம் . ஆனால் எந்த மனிதரும் தனித்து வாழ்தல் இயலாது . மக்களுடைய வாழ்வு கூட்டுறவுடையது . நூலும் ஆடையும் போல் மக்கட் சமூகம் ஒன்றுபட்டுக் கிடக்கின்றது . அவர்களை அறியாமலே அது பின்னிக் கொண்டிருக்கின்றது . நூல்களின் இணைப்பு - நெசவு - இல்லாவிட்டால் ஆடையில்லை . மக்களின் தொழில்களினால் ஒருவர்க்கொருவர் உதவியில்லாவிட்டால் சமூக வாழ்க்கையில்லை . இந்த உண்மையை அறிந்தவர்கள் சிலர் ;; அறியாதவர்கள் பலர் . நாம் தனி மனிதர் என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதரையும் விட்டு ஒழிய வேண்டும் . மக்கட் சமுதாயத்திலே நாம் ஒரு உறுப்பு என்ற எண்ணம் எல்லா மக்களிடமும் தோன்ற வேண்டும் . இதுபோலவே ஒவ்வொரு நாட்டினரும் தம்மைத் தனி நாட்டினராக நினைக்கும் மனப்பான்மை மாற வேண்டும் . மக்கள் வா...