உலக ஒற்றுமைக்கு வழிகாட்டியவர்கள் தமிழர்கள்
சாமி சிதம்பரனார்
உலகப் போக்கு
“நாம் தனித்தே வாழ்கின்றோம். நமக்குப் பிறர் உதவி வேண்டியதேயில்லை. நம்முடைய அறிவு, நம்முடைய திறமை, நம்முடைய உடல் வன்மை நமக்குத் துணை செய்கின்றன” என்று சிலர் - ஏன் - பலர் நினைக்கலாம்; பேசலாம்.
ஆனால் எந்த மனிதரும் தனித்து வாழ்தல் இயலாது. மக்களுடைய வாழ்வு கூட்டுறவுடையது. நூலும் ஆடையும் போல் மக்கட் சமூகம் ஒன்றுபட்டுக் கிடக்கின்றது. அவர்களை அறியாமலே அது பின்னிக் கொண்டிருக்கின்றது. நூல்களின் இணைப்பு - நெசவு - இல்லாவிட்டால் ஆடையில்லை. மக்களின் தொழில்களினால் ஒருவர்க்கொருவர் உதவியில்லாவிட்டால் சமூக வாழ்க்கையில்லை. இந்த உண்மையை அறிந்தவர்கள் சிலர்;; அறியாதவர்கள் பலர்.
நாம் தனி மனிதர் என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதரையும் விட்டு ஒழிய வேண்டும். மக்கட் சமுதாயத்திலே நாம் ஒரு உறுப்பு என்ற எண்ணம் எல்லா மக்களிடமும் தோன்ற வேண்டும். இதுபோலவே ஒவ்வொரு நாட்டினரும் தம்மைத் தனி நாட்டினராக நினைக்கும் மனப்பான்மை மாற வேண்டும். மக்கள் வாழும் இவ்வுலகம் ஒன்று. இவ்வுலகில் நாம் ஒரு பகுதியில் வாழ்கின்றோம்;; உலகத்தில் எந்தப் பாகத்தில் நன்மைகள் தோன்றினாலும் அவைகளின் பலனை நாமும் அடைவோம்;; உலகில் எந்தப் பகுதியில் நிகழும் தீமைகளும் நம்மைத் தீண்டாமல் விடமாட்டா. இவ்வுண்மையை மக்கட் சமூகம் மறந்து விடுதல் கூடாது.
இன்றைய மக்கட் சமுதாயத்தை எடுத்துக்கொண்டால் எந்தச் சமூகமும் கலப்பற்ற பழைய நாகரிகத்துடன் வாழ்வதாகக் கூற முடியவில்லை. எந்த சமூகமாவது, “எமது பழைய நாகரீகத்தை - பண்பை – கலையை - கலப்படமின்றிக் காப்பாற்றி வருகின்றோம”; என்று கூறினால் அது பொருளற்ற பேச்சு. “நாங்கள் தனித்த நாகரிகத்துடன்தான் வாழப்போகிறோம்; இடைக்காலத்தில் புகுந்த புதிய நாகரீகங்களை விரட்டியடிப்போம்”; என்று சொன்னால் அது காலத்தின் போக்கறியாத கண்கெட்டோர் வார்த்தை.
பழைய காலத்திலே, பகைவர்களுக்குப் பயந்தவர்கள், கோட்டைச்சுவர் எழுப்பிக் கொண்டு, கோட்டையைச் சுற்றிலும் அகழி வெட்டிக் கொண்டு, பாதுகாப்புடன் வாழ்ந்தனர். ஆகாய விமானம் இல்லாத காலம்; அப்பொழுது அகழியும் கோட்டையும் அரண் செய்தன. இன்று அவைகள் அரண் செய்ய முடியா. வானத்திலிருந்து குண்டுமாரி பொழிந்து வதைத்து விடுவான் எதிரி. இந்த உதாரணம் நாகரிகப் பாதுகாப்பிற்கும் பொருந்தும். தெய்வத்தின் பெயரால், மதத்தின் பெயரால், சாத்திரங்களின் பெயரால் நம்முடைய நாகரீகம் பழமையானது; தெய்வத்தன்மை பொருந்தியது; மாற்ற முடியாதது; ஆதலால் அதை அப்படியே காப்பாற்ற வேண்டும் என்று கூறினால் அதை நம்புவாரில்லை. காரணம், இது பகுத்தறிவுக்காலம். தங்கள் வாழ்க்கை நலத்தைக் கருதிப் பழமையை மாற்றிக் கொள்ளவும், புதியதைப் போற்றவும் பெரும்பாலான மக்கள் பின்வாங்குவதில்லை. பழையன கழிதலும் புதியன புகுதலும் அணைபோட முடியாத ஆற்று வெள்ளம்.
இன்று எந்த நாட்டு மக்களை எடுத்துக்கொண்டாலும் அவர்களுடைய மொழியிலே பிறமொழிச் சொற்கள் கலந்துவிட்டன் அவர்களுடைய பழக்க வழக்கங்களிலே பிற நாட்டுப் பழக்க வழக்கங்கள் கலந்துவிட்டன் அவர்களுடைய கலைகளிலே பிற நாட்டுக் கலைகள் கலந்துவிட்டன் அவர்களுடைய சமூகத்திலே மற்ற சமூகங்களின் இரத்தமும் கலந்துவிட்டது.
இந்தக் கலப்பு எந்தத் தனி மனிதன் முயற்சியினாலும் ஏற்பட்டதன்று; வலிந்து புகுத்தப்பட்டதன்று. தானே இயற்கையாக, நாளடைவில் உண்டான கலப்பு. இக் கலப்பை இனிப் பிரிக்க நினைப்பது பேரறிவின்; செயலாகாது.
இன்று பல நாட்டினர் ஒன்றுகூடிப் பழகுகின்றனர். பல சமூகத்தினர் ஒன்றாக ஓரிடத்தில் வாழ்கின்றனர்;; பல மொழியினர் ஒன்று சேர்ந்து பேசுகின்றனர்; ஓரிடத்தில் உறைகின்றனர்; அடிக்கடி ஒன்றுகூடுகின்றனர்; பல மதத்தினர் ஒரு நாட்டில், ஒரு நகரத்தில், ஓர் ஊரில், ஓர் இடத்தில் வசிக்கின்றனர்; பலதிறப்பட்ட நாகரிகமுடையவர்கள் ஒன்று சேர்ந்து பிரயாணம் செய்கின்றனர்; ஒன்று சேர்ந்து கல்வி கற்கின்றனர்; ஓரிடத்தில் வேலை செய்கின்றனர். ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் பிணைப்பு வளர்ந்து கொண்டு வருகிறது. வாணிகத் துறையிலே, கல்வித்துறையிலே, கைத்தொழில் கலையிலே, அரசியல் துறையிலே, பல நாடுகளுக்குள் வளர்ந்து வரும் கூட்டுறவைத் துண்டித்து விட முடியாது.
இவ்வாறு ஒன்றுபட்டுக் கலந்து வரும் உலகத்தை - மனித சமுதாயத்தை - இனித் துண்டு துண்டாக்கித் தனித்தனியே வைக்க முடியாது. இன்று அரசியல் காரணத்தை முன்னிட்டு மதத்தின் பெயரால், மொழியின் பெயரால், இனத்தின் பெயரால், நாகரிகத்தின் பெயரால் நாடுகளைத் துண்டுதுண்டாக்கலாம். ஆனால் அரசியல் வேற்றுமைகள் மறைந்த பின் - எல்லா மக்களும் இன்புறத் தகுந்த ஒரே விதமான அரசியல் கொள்கை தோன்றியபின் - உலக அரசாங்கங்களுக்குள் வேற்றுமையற்ற கூட்டுறவு ஏற்பட்ட பின் இத்துண்டுகள் இணைந்துவிடும்; ஒன்றாகிவிடும்; உலகம் ஒரே சமுதாயமாகிவிடும்.
மதம், மொழி, இனம், நாகரிகம் - இவற்றை அடிப்படையாகக் கொண்ட பிரிவுகள் நிலைத்திருக்க வேண்டுமானால் இன்றைய உலகப் போக்கையே மாற்றியமைக்க வேண்டும். ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் உள்ள போக்குவரவைத் துண்டித்து விட வேண்டும்; ஒரு நாகரிகமுடைய மக்களை அதற்கு மாறுபட்ட நாகரிகமுடைய மக்கள் சந்திக்கக் கூடாது; ஒரு மொழி பேசுவோர், மற்றொரு மொழியின் ஓசையைக் காதலும் கேட்கக்கூடாது; ஒரு நாட்டின் வரலாற்றை, சமூக அமைப்பை, மாறுதல் அரசியல் முறையை மற்றொரு நாட்டினர் தெரிந்து கொள்ளக் கூடாது; இன்று கலந்து கிடக்கின்ற சமூகத்தினரைத் தனித்தனியே சலித்து எடுத்துத் தனித்தனி இடங்களிலே சிறை வைத்து விடவேண்டும். சுருங்கக் கூறினால் இமயமலைச் சாரலிலே வாழும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும், பொதியமலைச் சாரலிலே வாழும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் எத்தகைய போக்குவரவு சம்பந்தமும் இல்லாதிருப்பது போல் மனித சமுதாயத்தையும் செய்துவிட வேண்டும். இதைச் செய்தால் மனித சமுதாயம், உலகம், நாகரிகம் தனித்தனியாக வாழக்கூடும். இவ்வாறு செய்ய முடியுமா? செய்ய வேண்டும் என்று எவரேனும் கூறினால் அவரைப் பற்றி உலகம் என்ன சொல்லும்?
உலகம் எப்பொழுதும் ஒரே போக்கிலேயே போய்க் கொண்டிருக்கிறது; சிறிது முன் பின்னாக உலகின் பல பாகங்களில் உள்ள மக்கட் சமுதாயங்களும் ஓரிடத்தை நோக்கியே மூட்டை முடிச்சுகளுடன் பிரயாணம் செய்து கொண்டிருக்கின்றன. இறுதியில் எல்லாச் சமுதாயங்களும் ஒரே இடத்தை அடைந்து ஒன்றுகூடி இன்ப வெள்ளத்திலே மிதக்கும் என்பது உறுதி.
உலகில் உள்ள எல்லாச் சமூகத்தினரும் மதத்திலே மாறுதல் வேண்டும் என்ற கருத்தில் ஒன்றுபட்டிருக்கின்றனர். பழைய மதங்கள் எல்லாம் பெயரளவிலேதான் உயிர் வாழ்கின்றன. அவைகளின் கொள்கைகளை அப்படியே பின்பற்றுவோர் உலகில் ஒருவரும் இல்லை. சுருங்கக் கூறினால் மதங்கள் உயிரற்ற பதுமைகளாகவே விளங்குகின்றன.
பழக்க வழக்கங்களும் உலகின் எப்பாகங்களிலும் மாறி வருகின்றன. துருக்கி தேசத்தினரின் உடைகள் ஆங்கிலேயரின் உடைகளாக மாறிவிட்டன. ஆங்கிலப்
பாங்கான உடை அகில உலகிலும் பரவி நிற்கின்றது. உலகில் எல்லாச் சமூகங்களில் உள்ள பெண்களும், ஆண்களுடன் சரிசமமாகப் போட்டியிட முன்வந்து கொண்டிருக்கின்றனர்.
இன்று எல்லா நாடுகளிலும் பொருளாதாரப் போராட்டம் தலைதூக்கி நிற்கின்றது. வாழ்க்கைச் சாதனங்கள் பொதுவுடைமையாக இருக்க வேண்டுமா? வாழ்க்கைச் சாதனங்களைச் சமமாகப் பங்கிட வேண்டுமா? என்பதே இன்றைய பொருளாதார நிபுணர்களின் போராட்டம். வாழ்க்கைச் சாதனங்களில் உழைப்பாளர்களுக்கு உரிமையில்லாத நிலைமை ஒழிய வேண்டும் என்பதை மறுப்போர் ஒரு சிலர்தான்.
மக்களின் விருப்பப்படி அரசியல் நடைபெற வேண்டும் என்பதில் உலக மக்களுக்குள்ளே வேறுபட்ட எண்ணங்களே இல்லை. உலகமெங்கும் மக்களின் கவலையே குறிக்கோளாகக் கொண்ட ஒரே வகையான சிறந்த அரசியல் நடைபெற வேண்டும் என்று கிளர்ச்சி செய்வோர் எல்லா நாட்டிலும் பெருகி வருகின்றனர்.
“ஆண்டாளன், அடிமை முறை அழிக்கப்பட வேண்டும்; உழைக்காத கூட்டத்தார் உழைப்பாளரின் உழைப்பில் பயனைக் கொள்ளை கொள்ளும் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும்; எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை. உடையார்களும் இல்லை என்று கம்பன் கனவு நனவாக வேண்டும்” என்ற கொள்கை இன்று உலகில் எங்கும் பரவி வருகின்றது.
இவைகளையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது, இன்றைய உலகம் ஒரே இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைக் காணலாம். மதம், சமூகம், அரசியல், பொருளாதாரம், நாகரிகம் எல்லாம் ஓரிடத்தையே குறிவைத்து விரைந்தேடுகின்றன. இதன் முடிவு உலக நாகரிகம் ஒன்றுபடும்; உலக சமூகம் ஒன்றுபடும்; உலக மதங்கள் ஒன்றுபடும்; உலகப் பொருளாதாரம் ஒன்றுபடும்; உலக அரசியல் ஒன்றுபடும்; உலக மொழிகள் கூட ஒன்றுபடும் காலமும் வந்துதான் தீரும்.
உலக ஒற்றுமைக்கு வழிகாட்டியவர்கள் தமிழர்கள். தமிழ் இலக்கியங்களில் தமிழ்நாட்டை உலகை விட்டுப் பிரிக்கவில்லை. தமிழர் சமுதாயத்தை உலக சமுதாயத்திலிருந்து பிரித்து வைக்க விரும்பவில்லை, உலகமெல்லாம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று பண்டைத் தமிழர் விரும்பினர.; உலகமெல்லாம் இன்புற்று வாழ வேண்டும் என்பதே பழந்தமிழர்களின் விருப்பம்.
“உலகத்தோடு ஒட்ட
ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் “ (குறள்)
பல வித்தைகளையும் கற்றிருந்தாலும் உலக நாகரிகத்தோடு, முற்போக்கோடு
சேர்ந்து வாழ்வதற்குக் கற்றுக்கொள்ளாதவர்கள் அறிவில்லாதவர்கள்.”
“தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்” (குறள்)
கல்வியும் அறிவும் உடையவர்கள் தாம் இன்பம் அடைவது போல் உலகம் முழுவதும் இன்றும் அடைவதற்கு வழிகண்டு, அவ்வழியையே பின்பற்ற விரும்புவார்கள்.”
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” (புறநானூறு)
எதுவும் நம்முடைய ஊர்; உலக மக்கள் எல்லோரும் நமது உறவினர்.
“பித்தெல்லாம் உடைய
உலகர்தம் கலகப்
பிதற்றெலாம் என்று ஒழிந்திடுமோ” (இராமலிங்கர்)
பலவகையாக வேற்றுமைப் பைத்தியங் கொண்ட உலக மக்களின் கழகத்திற்குக் காரணமான வேறுபட்ட உளறல்கள் எப்பொழுது தொலைந்து உலகம் ஒன்றுபடுமோ!”
“ ஒருமையின் உலகெலாம் ஓங்குக! எனவே
ஊதின சின்னங்கள்! ஊதின சங்கம்! (இராமலிங்கர்)
ஒன்றுபட்ட வழியிலே உலகில் உள்ள மக்கட் சமுதாயமெல்லாம் முன்னேறிச் செல்லுக என்று ஊதுகுழல்களெல்லாம் ஒரேயடியாக முழங்கின் சங்குகள் எல்லாம் காது செவிடுபட முழங்கின.”
இவைகள் எல்லாம் தமிழின் பண்பாட்டைக் காக்கும் திரைப்படங்கள். உலகப் போக்கை உணர்ந்து, உலகம் ஒன்றுபட வேண்டும் என்று விரும்பினவர்கள், விரும்புகின்றவர்கள் தமிழர்கள். தமிழர்களின் இந்த உயர்ந்த உள்ளக் கிடக்கை உலகமெலாம் பரவும் வகை உழைப்பது தமிழர் கடன்.
தமிழர் கண்ட தலைமை அறம்
“நான் மட்டும் வாழ வேண்டும்; தமது வாழ்வுக்காக மற்றவர்களை எதுவும் செய்யலாம்” என்று எண்ணுவது மனிதத் தன்மையன்று. எல்லோரும் வாழ வேண்டும், எல்லோர் வாழ்வுக்காகவும் உழைக்க வேண்டும் என்பதே மனிதத் தன்மை.
இந்த மனிதப் பண்பை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழன் பின்பற்றி வருகின்றான். தமிழ்க் குடியிலே தோன்றியவர்கள் எந்த நாட்டிலே குடியேறினாலும் இந்தப் பிறவிக் குணத்தை விட்டுவிடுவதில்லை. இச் சிறந்த குணமே தமிழர்கள் சென்ற நாடுகளில் எல்லாம் அவர்களைச் சிறப்புடன் வாழச் செய்கின்றது.
தமிழர்களின் பண்டைப் பண்பாட்டைப் பழந்தமிழ் நூல்கள் நமக்குக் கண்ணாடி போல் விளக்கிக் காட்டுகின்றன.
உலகம் முழுவதும் இன்புற்று வாழ வேண்டும் என்பதே தமிழர் பண்பாடு. சாதி, மத, இன, நிறம் காரணமாகத் தமிழர்கள் யாரையும் வெறுப்பதில்லை. தமிழர்களை அடக்கியாள - அடிமைப்படுத்த - தமிழர் பண்பாட்டை சிதைக்க - நினைப்பவர்களைத் தான் அவர்கள் பகைவர்களாக நினைப்பார்கள். ஒத்து வாழ முன் வருகிறவர்களையெல்லாம் உடன்பிறந்தவர்களாகத்தான் கருதுவார்கள்.
மக்கள் ஒன்றுபட்டு வாழ்வதற்கு வறுமையை தடைச்சுவர் என்பது பழந்தமிழர் கண்டறிந்த உண்மை. ஆதலால் பழந்தமிழர்கள் மக்களுடைய பசிப்பிணியைப் போக்குவதையே தலைசிறந்த அறமாக - கடமையாகக் கொண்டிருந்தனர்.
உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டு மக்களும் வறுமையின்றி
வாழ்வார்களாயின் ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் பிணக்கே ஏற்பட முடியாதே! ஒரு நாட்டின் பற்றாக்குறையே அவர்களுக்கு மற்றவர்களிடம் பகைமை உணர்ச்சியைத் தூண்டுவதாகும். போர்வெறி பிடித்தவர்கள், இந்தப் பற்றாக்குறையை எடுத்துக்காட்டிப் போர்க்களத்திலே மக்களை இழுத்துவிட்டுப் பலி கொடுப்பார்கள்.
மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வப் பொருள்களைப் பெற்றுக் கலையுணர்ச்சியுடன் வாழ்வார்களானால், அவர்கள் யார்மீதும் வெறுப்புக் கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் போர் வெறியையும் ஊட்ட முடியாது; அவர்களுக்குள் கலகத்தையோ, குழப்பங்களையோ உண்டாக்க முடியாது; இந்த உண்மையைப் பழந்தமிழ்ப் புலவர்களும், மன்னர்களும் வள்ளல்களும் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தனர்; நாட்டிலே வறுமைப்பிணி தலைக்காட்டாமல் பாதுகாத்தும் வந்தனர்.
இவ்வுண்மையைப் பண்டைச் செந்தமிழ் நூலாகிய புறநானூற்றில் உள்ள ஒரு பாட்டு நமக்கு விளக்கிக் காட்டுகிறது.
“அம்ம! இவ்வுலகிலே எல்லையில்லாத இன்பம் உண்டு. இன்பம் குடி கொண்டிருப்பதற்குக் காரணம் கூறுகின்றேன் கேளுங்கள், இவ்வுலக மக்கள் தன்னலமுடையவர்கள் அல்லர்; எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என்னும் எண்ணம் உள்ளவர்கள். இந்திரலோகத்தவர்களின் உணவான அமிர்தம் கிடைத்தாலும், கிடைத்தற்கு அரிய இனிய உணவு என்று நினைத்துத் தனியாக உண்ணமாட்டார்கள், யாரையும் வெறுக்க மாட்டார்கள்; எப்பொழுதும் சோம்பியும் இருக்க மாட்டார்கள். பிறர் அஞ்சும் பழிச்செயல்களைச் செய்ய அஞ்சுவார்கள்; புகழ் வரக்கூடிய அரிய செயல்களைச் செய்வதிலே உயிரையும் பொருட்படுத்த மாட்டார்கள். இந்த உலக அரசாட்சியே கிடைப்பதாக இருந்தாலும் பழிக்கத்தக்க செயல்களைச் செய்ய மாட்டார்கள்; எப்பொழுதும் சோர்வடைய மாட்டார்கள். இத்தகைய சிறந்த குணங்களையுடையவர்கள், தன்னலம் ஒன்றையே குறியாகக் கொண்டு உழைக்காதவர்கள், எப்பொழுதும் மக்கள் நலத்திற்கே உழைப்பவர்கள் -
இத்தகைய மக்கள் வாழ்வதால் இவ்வுலகில் இன்பம் உண்டு.” என்று பாடினார் ஒரு புலவர். இப்பாடல் தமிழ் மக்களின் இயல்பை எடுத்துக்காட்டுவது. அதே சமயத்தில், “உலக மக்கள் இக்குணத்தைப் பின்பற்ற வேண்டும்; இவ்வாறு உலக மக்கள் அனைவரும் வாழ்வார்களானால் இவ்வுலகிலே அமைதி என்றும் அழியாமல் வளர்ந்தோங்கும்” என்றும் அறிவிக்கின்றது.
“உண்டால் அம்மஇவ் வுலகம்
இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும்
இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே
முனிவிலர்; துஞ்சலும் இலர்;
பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்;
பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்;
அயர்வுஇலர்; அன்னமாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே.” (புறம்,182)
தமிழர்களின் உயர்ந்த பண்பாட்டை உரைக்கும் பாடல் இது.
இப்பண்பாட்டையே
வள்ளுவர் தலைசிறந்த அறம் என்று கூறுகின்றார். உலகிலே ஒப்பற்ற அறம், உள்ள உணவை எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுத்து உண்ணுதல்தான் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகின்றார். உலகில் உள்ள அறிஞர்கள் எல்லாம் இதையே சிறந்த அறம் என்று கூறுகின்றனர். உயர்ந்த அற நூல்கள் எல்லாம் இதையே ஒப்பற்ற அறம் என்று உறைக்கின்றன என்பதை எடுத்துரைக்கின்றார். இதனை,
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்; நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.” என்ற குறளால் காணலாம்.
“கிடைத்த உணவை எல்லோருக்கும் சமமாகப் பகுத்துக் கொடுத்து உண்டு, பல உயிர்களையும் துன்புறாமல் காப்பாற்ற வேண்டும். இதுவே அறநூல்களை வகுத்த அறிஞர்கள் தொகுத்துக் காட்டிய அறங்களில் எல்லாம் தலைமையான அறமாகும்” என்பதே அக்குறள் கூறும் பொருள்.
உலகிலே அமைதி நிலவ வேண்டுமானால் தமிழர் கண்ட இத்தலைசிறந்த அறம் உலகம் முழுவதும் பரவ வேண்டும். உலகிலே அமைதி நிலவ வேண்டும் என்று விரும்பாதவர்கள் ஒருவரும் இல்லை. எல்லோரும் அமைதியைத்தான் நாடுகின்றனர். ஆனால் அமைதி குடிகொள்வதற்கு அடிப்படை எது என்று காண் பதிலேதான் வேற்றுமை. இம்மாதிரி வேற்றுமை தோன்றுவதற்கு இடமில்லாமல் எல்லோராலும் ஒரே மனதாக ஒப்புக்கொள்ளும் வழியைத் திருவள்ளுவர் காட்டியிருக்கின்றார். பண்டைத்தமிழர் காட்டிய வழிதான் அது.
எல்லா மக்களும் இன்புற்று வாழ வேண்டும் என்னும் எண்ணம் தமிழன் உள்ளத்தைப் பரந்த உள்ளமாக்கியது.
“யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!
தீதும் நன்றும் பிறர்தர வாரா!”
என்று பாடச் செய்தது. இதுவும் புறநானூற்றுப் பாடல்தான்.
தமிழர்கள் எந்த ஊருக்கு - எந்த நாட்டுக்குப் போனாலும், அந்த ஊரைத் தம்முடைய ஊரைப் போலவே நேசிப்பார்கள்; அந்த நாட்டைத் தம்முடைய தாய் நாட்டைப் போலவே போற்றுவார்கள். தங்களுடைய நடத்தைகளாலு செய்கைகளாலுமே தீமையோ நன்மையோ தமக்கு உண்டாகும் என்ற உண்மையையும் அறிவார்கள்.
இத்தகைய உயர்ந்த நோக்கமுடைய தமிழர்கள் தங்கள் பண்பாட்டை மறவாமலிருக்க வேண்டுமானால்; தங்கள் தாய்மொழியைப் போற்ற வேண்டும்; கற்க வேண்டும். அதில் உள்ள அரிய இலக்கியங்களில் உயர்ந்த கருத்துக்களை உள்ளத்திலே கொள்ள வேண்டும்.
எல்லோரோடும் இணங்கி ஒத்துவாழும் உயர்ந்த பண்பை அவர்களுக்கு ஊட்டி வருவது தமிழ் மொழி என்பதைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிடுதல் கூடாது.
தமிழர் நிலத்தை - தமிழர் ஒற்றுமையை - தமிழர் நல்வாழ்வை - சாதி மத பேதமின்றி வளர்ப்பதற்குத் தமிழே தங்களை ஒன்றாகப் பிணைக்கும் கருவி என்பதை மறந்துவிடக் கூடாது.
தமிழர் பண்பு உலகத்தை ஒன்றுபடுத்தும் உயர்ந்த பண்பாகும். இந்தப் பண்பை ஏனைய மொழியினரும், இனத்தினரும் அறியச் செய்வது தமிழர் கடமை. இக் கடமையைச் செய்வதற்கு ஊக்கமளிப்பவள் தமிழ் அன்னை. வாழ்க தமிழ் அன்னை! வாழ்க தமிழர்! வாழ்க எல்லோரும்!








Comments
Post a Comment