நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/5-வது திருமொழி - உய்யவுலகு
ஊழிதோ றூழிபல ஆலிலை யதன்மேல்*
பைய உயோகுதுயில் கொண்ட பரம்பரனே!
பங்கயநீள் நயனத்து அஞ்சன மேனியனே*
செய்யவள் நின்னகலம் சேம மெனக்கருதிச்
செலவுபொலி மகரக் காது திகழ்ந்திலக*
ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. (1)
உயிர்களெல்லாம் பிழைக்கும்படி உலகங்களைப் படைத்து, பிரளய காலத்தில் அவற்றை உண்ட வயிற்றை உடையவனே! பல ஊழிக்காலங்களிலும் ஆலிலையின்மேல் உன்திருவயிற்றிலுள்ள உலகங்கள் அசையாதபடி மெல்ல யோகநித்திரை செய்த பெருமானே! தாமரை போன்ற நீண்ட திருக்கண்களையும் மைபோலக் கரியதான திருமேனியையும் உடையவனே! தலைவனே! திருமகள் தங்கும் உன் திருமார்பு, நீ ஆடும்போது அசையாதபடி காப்பினை உடைத்தாக வேண்டும் என நீ நினைத்துக்கொண்டு எனக்காக ஒருமுறை செங்கீரையாட வேண்டும். மகரக்குழைகள் அணிந்த காதுகள் மிகவும் ஒளிவிட, என் பொருட்டாக ஒருமுறை நீ செங்கீரை ஆடி அருள்க. ஆயர்களின் போர் ஏறே செங்கீரை ஆடுக.
குருதி குழம்பியெழக் கூருகிரால் குடைவாய்!*
மீளஅவன் மகனை மெய்ம்மைக் கொளக்கருதி
மேலை யமரர் பதிமிக்கு வெகுண்டுவர*
காளநன் மேகமவை கல்லொடு கால்பொழியக்
கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே!*
ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. (2)
இரணியன் புதல்வனை மெய்யன் எனக்காட்ட, நரசிம்மமாகத் தோன்றி அவ்வசுரன் உடலைக் கூறிய நகங்களால் கிழித்துக் குருதி குழம்பியெழக் கொன்றாயே! தேவேந்திரன் மிகச் சினந்து மேகங்களை ஏவிக் கல்மழை பெய்யச் செய்த பொழுது, (கோவர்த்தன) மலையைக் குடையாகப் பிடித்துப் பசுக்களைக் காத்தவனே! ஆண்மையாளனே! எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுக! ஆயர்கள் போரேறே ஆடுக, ஆடுகவே. எங்களுக்குத் தலைவனே! நான் மறையின் பொருளாய் இருப்பவனே! உன் கொப்பூழ் தாமரையிற் பிறந்த நான்முகனுக்குத் தாய் ஆனவனே! பூமி முழுவதுடன் நட்சத்திரம் நிலவும் ஆகாயம் வரை கால்களைப் பரப்பி, அதற்கு மேலும் வளர்ந்த திரிவிக்கிரமனே! குவலயா பீடம் என்னும் யானையையும் ஏழு காளைகளையும் மோதி வென்றவனே! தலைவனே! எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடி அருள்க! ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே!
நாவியுள் நற்கமல நான்முகனுக்கு* ஒருகால்
தம்மனை யானவனே! தரணிதல முழுதும்
தாரகையின் னுலகும் தடவி அதன்புறமும்*
விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ்விடையும்
விரவிய வேலைதனுள் வெனறு வருமவனே!*
அம்ம! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. (3)
எங்களுக்குத் தலைவனே! நான் மறையின் பொருளாய் இருப்பவனே! உன் கொப்பூழ் தாமரையிற் பிறந்த நான்முகனுக்குத் தாய் ஆனவனே! பூமி முழுவதுடன் நட்சத்திரம் நிலவும் ஆகாயம் வரை கால்களைப் பரப்பி, அதற்கு மேலும் வளர்ந்த திரிவிக்கிரமனே! குவலயா பீடம் என்னும் யானையையும் ஏழு காளைகளையும் மோதி வென்றவனே! தலைவனே! எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடி அருள்க! ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
வானவர் தாம்மகிழ வன்சகட முருள
வஞ்ச முலைப்பேயின் நஞ்சமுது உண்டவனே!*
கானக வல்விளவின் காயுதிரக் கருதிக்
கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே!*
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்
என்பவர் தாம்மடியச் செருவதிரச் செல்லும்*
ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. (4)
தேவர்கள் மகிழ, வலிய சகடாசுரன் உருண்டுமாள வஞ்சனைப்பூதனையின் மார்பு நெஞ்சை அமுதமாகக் குடித்தவனே! காட்டிலே வலிய விளாமரத்தின் காய்களை உதிரச் செய்யக் கன்றினைக் கொண்டு அதன் மீது எறிந்த - கரியநிறமுடைய என்கன்றே! தேனுகன், முரண், நரகன் எனும் அசுரர்களை அழித்த போர்யானையே! எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுக. ஆயர்கள் போர் ஏறே! ஆடுக, ஆடுகவே! நீண்ட கூந்தலையுடைய அழகிய இடைப்பெண்கள் மத்தாலே கடைந்த தயிரையும் நெய்யையும் அவர்கள் அறியாதபடி அள்ளி விழுங்கினாய். உன்னைக் கொல்லும் நினைப்போடு இணை மருதங்களாய் நின்ற அசுரர்களை உன் தொடைகளினாலும் கைகளினாலும் தள்ளியளித்தாய். உன் முத்துப்பற்களின் புன்முறுவல் தோன்று முன்னேயே அழகு பொருந்திய உன்முடியானது உன்முகத்தில் தாழ்ந்து நீ ஒருதடவை செங்கீரை ஆடி அருளுக. ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே.
மத்தளவும் தயிரும் வார்குழல் நன்மடவார்
வைத்தன நெய்களவால் வாரிவிழுங்கி* ஒருங்கு
ஒத்தஇணை மருதம் உன்னி யவந்தவரை
ஊருகரத் தினொடும் உந்திய வெந்திறலோய்!*
முத்தினிள முறுவல் முற்ற வருவதன்முன்
முன்னமுகத் தணியார் மொய்குழல்கள் அலைய*
அத்த! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. (5)
நீண்ட கூந்தலையுடைய அழகிய இடைப்பெண்கள் மத்தாலே கடைந்த தயிரையும் நெய்யையும் அவர்கள் அறியாதபடி அள்ளி விழுங்கினாய். உன்னைக் கொல்லும் நினைப்போடு இணை மருதங்களாய் நின்ற அசுரர்களை உன் தொடைகளினாலும் கைகளினாலும் தள்ளியளித்தாய். உன் முத்துப்பற்களின் புன்முறுவல் தோன்று முன்னேயே அழகு பொருந்திய உன்முடியானது உன்முகத்தில் தாழ்ந்து நீ ஒருதடவை செங்கீரை ஆடி அருளுக. ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே.
காயமலர் நிறவா! கருமுகில் போலுருவா!
கானக மாமடுவில் காளியனுச்சியிலே*
தூயநடம் புரியும் சுந்தர என்சிறுவா!
துங்கமதக் கரியின் கொம்பு பறித்தவனே!*
ஆயமறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை
அந்தர மின்றியழித் தாடிய தாளிணையாய்!*
ஆய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. (6)
காயாம் பூ நிறத்தவனே! நீலமேக உருவத்தாய், காட்டில் பெரிய மடுவில் காளிங்கன் தலையிலே நடனம் செய்த அழகனே! என் மகனே! மதமிகுந்த குவலயாபீடம் எனும் யானையின் கொம்புகளைப் பறித்தவனே! மற்போர் வகை தெரிந்து வந்த மல்லர்களை உனக்கு ஆபத்தின்றி அழித்துக் கூத்தாடிய இரண்டு திருவடிகளையுடையவனே! ஆயனே! எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுவாயாக. ஆயர்கள் போரேறே செங்கீரையாடுவாயாக.
துப்புடை யாயர்கள் தம்சொல் வழுவாது ஒருகால்
தூய கருங்குழல்நல் தோகை மயிலனைய*
நப்பின்னை தந்திறமா நல்விடை யேழவிய
நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே!
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்
தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிய* என்
அப்ப! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. (7)
ஒரு காலத்தில் வலிமையுடைய இடையர்களின் சொல்தவறாமல் - கறுத்த கூந்தலையுடைய மயில்போன்ற நப்பின்னையை மணப்பதற்காகக் கொடிய காளைகள் ஏழையும் அடக்கிய வல்லமை உடையவனே! ஒளிமயமான பரமபதத்துக்கே உன்தேரைச் செலுத்தி, கைதப்பிப்போன அந்தணன் பிள்ளைகளை மீட்டுத்தாயுடன் கூட்டிய என் அப்பனே! எனக்காக ஒருமுறை செங்கீரையாடுவாயாக! ஆயர்கள் போரேறே செங்கீரையாடுவாயாக.
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்துவரும்*
கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக்
கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி*
மன்னுகுருங் குடியாய் வெள்ளறையாய்! மதிழ்சூழ்
சோலைமலைக் கரசே கண்ண புரத்தமுதே!*
என்னவலம் களைவாய்! ஆடுக செங்கீரை
ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே. (8)
என்றும் நிலைநிற்பதான திருக்குறுங்குடி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருப்பவனே! திருவெள்ளறையில் உறைபவனே! மதில் சூழ்ந்த திருமாலிருஞ்சோலை மலைக்குத் தலைவனே! திருக்கண்ணபுரத்து அமுதே! என்னுடைய துன்பத்தைப் போக்குபவனே! உன்னை இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு தத்தம் இல்லங்களுக்குச் சென்று தங்கள் கருத்துக்குத்தக்கவாறு உன்னோடு உறவாடுகின்ற கன்னியர்கள் மகிழவும், காண்பவர்கள் கண்குளிரவும், கற்றவர்கள் பிள்ளைக் கவிபாடவும் நீ செங்கீரையாடுவாயாக, உன்னை மகனாகப் பெற்ற என் மனம் மகிழும்படி ஏழுலகங்களுக்கும் தலைவனே! நீ செங்கீரையாடுவாயாக.
பாலொடு நெய்தயிர் ஒண்சாந்தொடு சண்பகமும்
பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறிவர*
கோலநறும் பவளச் செந்துவர் வாயினிடைக்
கோமள வெள்ளி முளைப்போல் சிலபல்லிலக*
நீலநிறத் தழகா ரைம்படையின் நடுவே
நின்கனி வாயமுதம் இற்று முறிந்துவிழ*
ஏலுமறைப் பொருளே! ஆடுக செங்கீரை
ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே. (9)
சேர்திக ழாழிகளும் கிண்கிணியும்* அரையில்
தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின்
பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்*
மங்கள வைம்படையும் தோள்வளையும் குழையும்
மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக*
எங்கள் குடிக்கரசே! ஆடுக செங்கீரை
ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே. (10)
எங்கள் குடிக்கு அரசே! உன் திருவடிகள் செந்தாமரை போன்றவை. விரல்களோ பூவின் உள்ளிதழ் போன்றவை. அவற்றில் உள்ள திருவாழி மோதிரங்களும், கால்சதங்கைகளும், இடையிலுள்ள பொன் அரைநாணும், பொன்னால் செய்த காம்பை உடைய மாதுளம் பூக்கோவையும், இடையிடையே கலந்து கோத்த பொன்மணிக் கோவையும், திருக்கையிலுள்ள மோதிரங்களும், மணிக்கட்டிலுள்ள சிறுபவள வடமும், திருமார்பில் உள்ள ஐம்படைத்தாலியும், தோள்வளைகளும், காதணிகளும், மகரகுண்டலங்களும், காதின் மேல் அணிந்துள்ள வாளிகளும் நெற்றிச் சுட்டியும் அழகுடன் விளங்கும்படி நீ செங்கீரையாடுவாயாக. ஏழுலகும் உடையவனே, நீ செங்கீரையாடுவாயாக.
அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்
ஆமையு மானவனே!ஆயர்கள் நாயகனே!*
என்அவலம் களைவாய்!ஆடுக செங்கீரை
ஏழுலகு முடையாய்!ஆடுக ஆடுகவென்று*
அன்னநடை மடவாள் அசோதை யுகந்தபரிசு
ஆனபுகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்ததமிழ்*
இன்னிசை மாலைகள் இப்பத்தும்வல்லார் உலகில்
எண்திசையும் புகழ்மிக்கு இன்பமது எய்துவரே. (11)
‘அன்னம், மீன், நரசிம்மன், வாமனன், ஆமை ஆக அவதரித்தவனே! என் இடர் நீக்கிய ஆயர்தலைவனே! நீ செங்கீரை ஆடு’ என்று அன்ன நடையாள் அசோதை விரும்பி வேண்டியதைப் புதுவைப்பட்டர் பிரானாகிய பெரியாழ்வார் இன்னிசை மாலைகளாக அருளினார். இப்பத்தையும் ஓதவல்லவர்கள் உலகில் எண்திசைகளிலும் புகழும் இன்பம் பெறுவார்கள்.
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
Comments
Post a Comment