தொல்காப்பியரின் அறிவியல் பார்வை - பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்
தொல்காப்பியரின் அறிவியல் பார்வை
உலக உயிர்களைப் பகுத்துணர்தல்
- பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம்
இயற்கையையும் இயற்கை நிகழ்வுகளையும் அறிந்து கொள்வதற்கு அவற்றை உற்றுநோக்கி அறிவதுதான் முறை என்பது கிரேக்க சிந்தனை மரபாக இருந்தது. அரிஸ்டாட்டில் (Aristotle) கி.மு. (384-322) ஆண்டில் முன்மொழிந்த பின், கணித நிபுணர் ஆர்க்கிமிடிஸ் நெம்புகோல் விதியை முன்வைத்தார். அதன்பின் கி.பி. இரண்டாவது நூற்றாண்டில் தாலமி (Ptolemy) அரிஸ்டாட்டில் கூறியதை உறுதிப்படுத்தினார். சோதனைகள் தேவை என்று அப்போது கருதவில்லை. அரிஸ்டாட்டில் முதன்முதலாக (384-322 கி.மு.) உயிர்களை ஏணிப்படி வரிசையில் வைத்து கீழ்ப்படியில் தாவரங்கள், அதற்கு மேல் பூச்சிகள், நத்தைகள், ஊர்வன, பறப்பன அனைத்திற்கும் மேலாக மனிதன் என்ற கருத்துருவை (Hierarchy Concept) உருவாக்கினார். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே தொல்காப்பியர் உலகிலுள்ள உயிர்ப்பொருட்களை அவை அறியும் புலன்கள் வழி அறிவு விரிவடையும் நிலையைக் கணித்து உயிர்ப்பொருட்களை ஆறு வகையாக ஏணிப்படி முறையில் சொல்லி வைத்துள்ளார். அச்செய்தியும் தொன்றுதொட்டு “நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்திய”தைத் தான் கூறுவதாக எடுத்து மொழிந்துள்ளார். நேரிதின் அறிந்தோர் மட்டும் அல்லர்; உணர்ந்தோரே நெறிப்படுத்தியுள்ளனர். எனவே இக்கருத்து தொல்காப்பியருக்கு முன்பே பல நூற்றாண்டுகளாக நேரிய முறையிய் உணர்ந்து நெறிப்படுத்தியுள்ளதாகும். அந்த நூற்பாவையும், கூறும் நெறியையும் காண்போம்.
"ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனமே
நேரிதினுணர்ந்தோர் நெறிப்படுத்தினரே"
(தொல்.பொருள்.மரபியல் சூ.582)
எனவே மேனி, நாக்கு, மூக்கு, கண், செவி, மனம் என ஆறினையும் பகுத்து ஐம்புலன்களையும் அவற்றோடு மனத்தையும் தெளிவாகச் சுட்டியுள்ளார். அப்படியானால் உலகிலுள்ள எல்லாப் பொருட்களையும் எவ்வாறு பிரித்துக்காட்டுவது! அவரே எடுத்துக்காட்டுகளோடு ஒவ்வொரு அறிவுப் பிரிப்பையும் விளக்கியுமுள்ளார்.
“புல்லும் மரனும் ஓரறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” (583)
“நந்தும் உரளும் ஈரறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” (584)
“சிதலும் எறும்பும் மூவறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” (585)
“நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” (586)
“மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” (587)
“மக்கள் தாமே ஆறறிவுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” (588)
ஆறு பிரிவுகட்கும் நூற்பாவின் முதலில் எடுத்துக்காட்டுகள் தந்து விளக்கி அவை போன்ற உலகிலுள்ள உயிர்கள் எல்லாம் இந்த ஆறு வகையினுள் அடங்கும் எனக் காட்டியிருப்பது தெளிவும் உறுதிப்பாடும்கொண்ட முறையன்றோ? இது அறிவியல் நெறிக்கு உகந்ததல்லவா? இங்கு அரிஸ்டாட்டில் நெறிக்கும் தொல்காப்பியத் தமிழர் நெறிக்குமுள்ள வேறுபாட்டைக் காண்க. யாரிடமிருந்து யார் வாங்கினார் என்ற பிரச்சினையே இல்லை. உலகெங்கும் அறிஞர்கள் ஆங்காங்கு உள்ளனர். ஒத்த உணர்வு தொடர்பின்றியே நிகழுதலும் இயற்கை. ஆகவே பிரச்சினை எழுப்ப வேண்டியதில்லை. எனினும் தொல்காப்பியர் காலம் அரிஸ்டாடிலுக்கு முந்தியது என்பது மட்டும் உறுதி. அறிவு வழிபிரித்துணர்த்தியவர் தமிழரே என்பது இதனால் விளங்கும்.
உலக அமைப்பு
உலகம் ஐந்து இயற்கைத் தன்மையின் கூட்டுறவால் ஆனது என்பது தொல்காப்பியர் கணிப்பு.
"நிலம் தீ நீர் வளி விசும்பு ஓடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்" (644)
என நூற்பா பேசுகிறது. நிலம், நீர், தீ என அமைவது முறையே ஆயினும் நிலம், தீ, நீர் என நூற்பா வரிசை மாற்றி அமைத்திருப்பது இவை கலந்து மயங்கும் என்பதை உணர்த்தவே போலும். இந்த ஐந்து இயற்கைப் பொருள்களையும் இந்த உலகம் கொண்டது என்பதை இன்றைய அறிவியலும் ஏற்கும். “கலந்த மயக்கம்” என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும். ஒவ்வொரு பொருளையும் 2 ஆகப் பிரித்தால் (1/2+1/2) ஆகும். ஒரு 1/2 ஐ அப்படியே வைத்துக்கொள்ளவும். மற்றொரு அரையை நான்காகப் பிரிக்கவும். பிரித்தால் (1/8 + 1/8 + 1/8 + 1/8) என ஆகும்.
இவ்வாறு ஐந்தும் கலந்து மயங்கும். அதாவது இயற்பியலும் வேதியியலும் நிகழும் (Physical and Chemical Changes) கலத்தலும் மயங்குதலும் ஏற்பட்டுள்ளது விளங்கிக்கொள்வதற்காகப் படம் வரைந்து விளக்கப்பட்டுள்ளது. எனவே, உலகம் ஐந்து இயற்கைப் பொருள்களும் தக்கவாறு கலந்து ஆக்கப்பட்டுள்ளது என்பது கருத்தாம்.
வெளியும் காலமும்
இந்த உலகம் இடம் நிலம் உடையது. அத்துடன் காலத்தையும் கொண்டது. தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் அகத்திணையியல் தொடங்கும் போது இடத்தையும் காலத்தையும் முதற்பொருள் எனக் குறிப்பிடுகிறார். இவ்விரண்டும் அளவிட இயலாதவை. அளவு கடந்தவை. உலகம் காலமும் இடமுமாக உள்ளது. எல்லையற்ற காலமாகவும் எல்லை அறிய (இயலாத) இடமாகவும் உலகம் உள்ளது.
“முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறை சிறந்தனவே”
என்பது தொல்காப்பியம் அகத்திணையியல் மூன்றாம் நூற்பா.
“முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே”
என்பது அடுத்த நான்காம் நூற்பா. தொல்காப்பியர் தன் கூற்றாகச் சொல்லவில்லை. இயல்புணர்ந்தோர் மொழிப என அதனியல்புணர்ந்தோர் கூறியதையே தாம் மொழிவதாகக் கூறுவது குறிக்கத்தக்கது.
தொல்காப்பியர் நிலம் எனக் கூறுவதுதான் இன்றைய SPACE அறிவியல் கூறும் பொழுது என்று கூறுவது. இன்றைய காலம் (Time) என அறிவியல் பேசும். இவை இரண்டும் உலக வாழ்வின் முதற்பொருள் ஆம். இன்றைய அறிவியலாளர் கூற்றுடன் தொல்காப்பியம் ஒன்றிப்போய் நிற்கிறதன்றோ!
புணர்தல், பிரிதல், ஊடல் முதலிய வாழ்க்கை நிகழ்ச்சிகள் எல்லாம் உரிப்பொருள். தெய்வம், உணவு முதலிய ஏனைய பலவும் கருப்பொருள் என்பது தொல்காப்பியம் கூறும் முப்பொருள் பிரிவினையாம். இங்குக் கூர்ந்து கவனிக்கத்தக்கது கடவுளை முதற்பொருளாகக் கூறாமல் கருப்பொருளாகத்தான் தொல்காப்பியர் கொண்டுள்ளார் என்பதாம். இம்மூன்று பிரிவுகளும் அறிவியல் தன்மை கொண்டவை எனலாம்.
இந்தப் பிரபஞ்சம் (உலகம்) காலமாகவும் இடமாகவும் உள்ளது என்றால் அதனை ஆட்டிப் படைக்கும் சக்திகளாக ஒலியும் ஒளியும் உள்ளன எனக் கூறின் பிழையாகுமா? ஒலி இல்லை என்றால் உலகத்துப் பொருட்கள் எல்லாம் செவிடாக இருக்கும். ஒளி இல்லை என்றால் குருடாகத்தாமே இருக்க முடியும். இந்த ஒலியினால் தான் மொழியே பிறக்கிறது. இது தொல்காப்பியர் காலத்தில் தோன்றியதில்லை. தொன்றுதொட்டு வருவது. அதனை மரபாக ஏற்றுக் கொண்டுதான் நூல் படைத்துள்ளனர். எழுத்ததிகாரம் என அவர் படைத்துள்ளது ஒலி இயலே ஆம். நூல் மரபு, மொழி மரபு, தொகை மரபு என எழுத்ததிகாரத்திலும் விளி மரபு எனச் சொல்லதிகாரத்திலும் மரபியல் என்றே தனித்து ஒரு இயல் பொருளதிகாரத்திலும் அவர் போற்றி மரபுகளை வலியுறுத்தியதால்தான் தமிழ் அன்று முதல் இன்று வரை வழக்கு மொழியாகவும் நூல் மொழியாகவும் உயிருடன் வாழ்ந்து வருகிறது.
ஒவ்வொரு ஒலியும் ஒலிக்கப்பட வேண்டிய கால அளவு மிக நுண்ணியது. அந்த அளவை “நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே” வரையறுத்துக் காட்டியுள்ளார். ஒவ்வொரு எழுத்தின் ஒலி அளவையும் அவை பிறக்கும் நெறியையும் பிறப்பியலில் தெளிவுபடுத்தியுள்ளார். தொல்காப்பியரின் உடலியலறிவும் நுட்பமும் இங்கு பளிச்சிடுகின்றன. இங்கு ஒரு வினா எழுப்பலாம். இவ்வொலிகளுக்குரிய வரிவடிவை எழுத்துக்களை விளக்கவில்லையே என்று. எழுத்து வடிவங்களைக் கொண்டு தானே இந்நூற்பாக்களையே எழுதியுள்ளார். அந்த எழுத்து வடிவங்களைக் கண்முன் நேரில் காட்டும் போது அவற்றை ஏன் சொற்களால் விளக்க வேண்டும் என நினைத்தால் அது நகைப்பூட்டி அவர் ஆழ்ந்த சிந்தனையைக் காட்டும்;. வினா எழுப்பியதற்கு நாண வேண்டி வரும்.
உயிர், மெய் என ஒலிகளுக்குப் பெயரிட்டு வரையறை கூறல் :
ஒலிகள் இருவகையாக எழுப்பப்படுகின்றன. வளி (காற்று) உடலில் மெய்யில் எங்கும் தடைப்படுத்தப்படாமல் மூக்கின் வழியோடு வாய் வழியாக வெளிப்பட்டு வரும்போது உண்டாக்கப்படும் வேறுபட்ட ஒலிகளையும் உயிர் என்கிறார். அவை பன்னிரண்டாகும் என்றும் குறில் ஐந்து நெடில் ஏழு என்றும் சுட்டுவது நோக்கத்தக்கதாகும். மனிதரின் உயிர் உடலின்றியும் இருக்கும். தானே இயங்க வல்லது. ஆனால் உடம்பு மெய் அப்படியன்று. வளி வெளிப்படும்போது பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் ஆகியவற்றில் தடைபட்டுப் பிறக்கும் ஒலிகள் உடம்பில் பட்டு வெளிப்படும் ஒலிகள் மெய் ஒலிகள் எனப் பெயர் தருகிறார்.
உயிர், மெய் என இவ்வொலிகளுக்குப் பகுத்தறிவு ரீதியாகப் பெயர் கொடுத்துள்ளமை கண்டு இவ்வாறு பெயரிட வேண்டுமானால் எவ்வளவு காலத்திற்கு முன்னே இவை வழங்கப்பெற்றுப் பண்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என டாக்டர் கால்டுவெல் புகழ்ந்திருப்பதை நாம் பெருமையாகக் கருத வேண்டாவா!
உ- ஒலியின் தனித்துவம்
உயிர் ஒலிகளில் உ மட்டும் குறுகி இறுதியில் வருவதை நுட்பமாகக் குற்றியலுகரப் புணரியல்; எடுத்து விளக்கும். வெறும் உற்று நோக்கால் மட்டும் இவற்றை அளக்க முடியுமா? திரட்டித் தெளிவு பெற்ற பின்புதானே உறுதிப்படுத்த முடியும்.
இந்த உ காரத்தில் தமிழ் மொழியில் எண்ணுப் பெயர்கள் வழங்குவதை எவ்வளவு நுட்பமாகத் தொல்காப்பிய நூலில் காட்டப்பட்டுள்ளன என்பதை நினைத்துப் பார்ப்பது நம் கடமை. ஒன்று முதல் பத்து வரை எல்லா எண்ணுப்பெயர்களும் உகர ஈறு கொண்டிருப்பதும் அவை ஒலிக்கும்போது அவ் உகரம் தன் அளவில் குறைந்து குற்றுகரமாக ஒலிப்பதும் தெளிவாகக் காட்டப்படுகிறது. மேலும், நூறு என்று அமையும் போதும் குற்றியலுகரமே உடையது. அடுத்து ஆயிரம் நூறாயிரம் என வேறுபட்டு வருவதையும் காட்டியுள்ளார். இலட்சம் என்பது இங்கு தொல்காப்பியத்தில் இல்லை. எல்லாம் பத்துப்பத்தாகவும் நூறு நூறாகவுமே அமைந்துள்ளன. இன்றைய கணக்கியலில் கணம் சிறப்பாகப் பேசப்படுகிறதே! அது தொல்காப்பியர் கண்ட கோட்பாடே என்று கூறுவதில் பிழை வந்து விடுமா? தொல்காப்பியர் போற்றும் அறிவியல் பார்வையைக் கண்டு பெருமிதம் கொள்வோம்.
சொற்களைப் பிரித்தல்: உயர்திணை, அஃறிணை
ஒலிகளை உயிர், மெய் என்றும் பொருட்களை அகம், புறம் என்றும் பகுத்துக் காட்டிச் சிறப்பிப்பது போலவே சொற்களையும் உயர்திணை, அஃறிணை எனப் பிரித்திருப்பது நுண்ணறிவாம்.
“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்கு மன சொல்லே”
என்பது தொல்காப்பிய சொல்லதிகார நூற்பா. மக்களாகப் பிறந்தவர்கள் எல்லோரையும் மக்கள் என்றும் உயர்திணை என்றும் கொள்வதில்லை. மக்கள் என்று சுட்டப்படுபவர்களையே, மக்களுக்குரிய மனிதநேயப் பண்புடையவர்களையே – உயர்திணை என்பர். தோற்றத்தில் மக்கள் போல் இருந்தாலும் அப்பண்புகளில்லையானால் அல்;திணை – அஃறிணையே ஆவர். உளவியலறிவியல் சமூக அறிவியல் பார்வைகள் இங்கு வெளிப்படுத்தப்படுகின்றதன்றோ?
எனவே தொல்காப்பியர் தமிழ் மொழியை அறிவியல் கொண்டு தமிழிலக்கணம் கணித்துள்ளார் எனக் கூற என் அறிவு விரும்புகிறது.
Comments
Post a Comment