ஆண்டாள் பிரியதர்ஷினி - கவிதைகள்
கவிதை 1. கண்ணகியாய் வெடிப்போம்
வேண்டாம் இனிநமக்கு
வெற்றி வளையங்களாலே வாழ்க்கைஅமைப்போம்
அதுவே நம்கிழக்கு
பௌர்ணமிநிலவைப் பாதைவிளக்காய்
நிதமும் நாம்பிடிப்போம்
கண்ணீர்க்கடலுக்குள்ளே கரைந்துவிடாமல்
கண்ணகியாய் வெடிப்போம்
தென்றல்காற்றும் தீயின்சுடரும்
எங்கள் அவதாரம்
இந்தமண்ணின்பலமே பெண்ணின்பலம்தான்
சொல்வோம் தேவாரம்
பூக்கள் இல்லை நிமிர்ந்தேஎரியும்
தலைகீழ்த் தீப்பந்தம்
சுவாசக்காற்றுக்குள்ளே குஞ்சுபொரிக்கும்
உயிரின் நெய்ப்பந்தம்
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
எல்லாம் பழங்காலம்
இனி உச்சம் ஞானம் திடம் உயிர்ப்பு
எங்கள் புதுக்கோலம்
கிழக்குவெளுப்போம்! காற்றுதுடைப்போம்
படைப்போம் புதுபூமி
கல்விச்சாதனை ஒன்றே முகமாய்க்கொள்வோம்
உழைப்பே நம்சாமி.
🔆🔆🔆🔆🔆
கவிதை 2. தோகையெல்லாம் துப்பாக்கிகள்
- காலம்காலமாய்க்
காப்பியம் எல்லாம்
பெண்ணைச் சொன்னது ஒரேமொழி
காதல் மயக்கம்
கள்ளாய்க் கொட்டிக்
கிறங்கச் செய்யும் போதைமொழி
- வார்த்தை வீசி
வலையை வீசி
ஜாலம் செய்தது பெண்ணிடமே
சிந்தனை இல்லாச்
சதைமகள் என்றே
ஞாலம் சொன்னது நம்மிடமே
- ஆண்டியில் தொடங்கி
அரசன் வரைக்கும்
பெண்ணில்லாமல் வாழ்வில்லை
மாண்டவர் வருபவர்
இருப்பவர்க்கெல்லாம்
பெண்ணின் உறவே வாழ்வெல்லை
- பூமித்தாயின்
அவதாரம்தான்
பெண்ணின் பொறுமை என்பார்கள்
பூகம்பத்தின்
கோபம்கூடப்
பொறுமைப் பெண்ணின் வடிவம்தான்
- மயிலும் குயிலும்
பெண்ணே என்பர்
தோகை எல்லாம் துப்பாக்கிகள்
குயிலின் பாட்டு
கைவிலங்கொடித்து
விடுதலை கூவும் அதிர்வேட்டுகள்
- மானும் மலரும்
தேனும் இல்லை
மனுஷி என உரைப்போம்
பொன்னும் பூவும்
புதிரும் இல்லை
புயலாய்ப் புவிநிறைப்போம்
- தெய்வமும் தாசியும்
வேசியும் இல்லை
பெண்களும் மனிதப் பிறவிகளே
பெண் ஒரு பாதி
ஆண் மறு பாதி
விரிப்போம் மனிதச்சிறகுகளே.
🔆🔆🔆🔆🔆



Comments
Post a Comment