இன்பத் தமிழ் (கவிதை-விளக்கம்)
- பாவேந்தர் பாரதிதாசன்
தமிழுக்கும் அமுதென்றுபேர்! - அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
‘உண்டவர்களை மயக்கம் கொள்ளச் செய்யும் மதுவாகத் தமிழை உவமிக்கின்றார். மனிதர்கள் இளமையோடு பொலிவாக இருக்கப் பால் எப்படிப் பயன்படுகிறதோ, அத்தகைய பால் போன்ற சுவையும் வளமும் நிறைந்தது தமிழ். இந்தத் தமிழ் புலவர்களின் புலமையை அறிவிக்கும் கூர்வேலாகும். தமிழ் எங்கள் உயர்வுக்கு வானமாகும். இன்பத் தமிழ் மொழியே எங்கள் அறிவுக்குத் தோளாகும். இன்பத் தமிழ் எங்கள் கவிதையில் கவித்துவத்திற்கு வாளாகும். எங்கள் பிறவியின் தாயாகும். அப்படிப்பட்ட இன்பத் தமிழ் எங்கள் வாழ்க்கையை வளமுடையதாக மாற்றக் கூடிய தீ ஆகும்’.
இப்பாடல் உவமைச் சிறப்பு மிக்கதாகும். தமிழுக்கு அமுதையும், நிலவையும், நறுமணத்தையும் மதுவையும் உவமிக்கின்றார். தமிழின் சுவையைத் தேனின் சுவையோடு ஒப்பிடுகிறார்.

Comments
Post a Comment