அழகுக் கலைகள்
முனைவர் க.த. திருநாவுக்கரசு
முத்தமிழ்
உலகம் கண்டு வியக்கத்தக்க அழகுக் கலைகள் பலவற்றைத் தமிழகம் உலகிற்கு அளித்துள்ளது. தமிழருடைய முருகியல் உணர்வு முத்தமிழாக முகிழ்த்தது. மும்மலை, முந்நாடு, முப்பொருள், முப்பால் என்று மும்மூன்றாக எதையும் தொகுத்துக் கூறுவது பண்டைத் தமிழ்ப் பண்பாட்டின் தனிச்சிறப்பாகும். இம்மரபு வழியே முகிழ்த்ததே பண்டைத் தமிழருடைய ‘கலையியல்’ கோட்பாடாகிய முத்தமிழாகும். ‘தெரிமான் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்’ எனும் பரிபாடல் பகுதியால் சங்க காலத்தின் கடைப்பகுதியில் தமிழருடைய அழகியல் உணர்வு ‘முத்தமிழாக’ வளர்ச்சியுற்றதைக் காணுகின்றோம்.
பண்டைத் தமிழ் மக்களின் அழகியல் உணர்வு அவர்கள் பேசிய மொழியின் மூலம் மூவகையாக வெளிப்பட்டது. அவை இயல், இசை, நாடகம் என்பனவாகும். இயற்றமிழ் எண்ணத்தை வளர்ப்பது; சொற்களால் எண்ணத்தை வெளிப்படுத்துவது. இசைத்தமிழ் உள்ளத்து உணர்ச்சிகளை ஒலி நயத்தால் உணர்த்துவது. நாடகத்தமிழ் உள்ளத்து உணர்ச்சிகளைக் கண்ணுக்குப் புலனாகுமாறு காட்டுவது, உடலினுள் இருந்து எழும் உணர்ச்சி ஆற்றலால் ஒலி வெளிப்படுகிறது. அவ்வொலியால் அமைவதே ‘மொழி’ என்று பண்டைத் தமிழர் கருதினர். அம்மொழியால், அமையும் இலக்கிய, இலக்கணங்களை ‘இயற்றமிழ்’ என்று போற்றினர். கேட்போரைத் தன் வயப்படுத்தும் ஆற்றலுடன் உள்ளத்தில் எழும் உணர்வுகளை இன்னொலியுடன் உணர்த்தும் மொழியை ‘இசைத்தமிழ்’ என்றும் குறித்த உணர்ச்சியையும், சுவையையும் இயலும் இசையும் இணைந்து விளங்க, நடிப்பால் வெளிப்படுத்துவதை ‘நாடகத்தமிழ்’ என்றும் அவர்கள் பாகுபாடு செய்துள்ளனர்.
இயல்தமிழ்
இயல்தமிழ் இலக்கிய இலக்கணங்களின் வாயிலாக வளர்ந்து வருகிறது. இந்திய இலக்கியங்களுள், தமிழ் இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொடர்ந்த வரலாற்றை உடையதாகும். உலகச் செம்மொழியாகப் போற்றப்படுவதற்குரிய தகுதியும் சிறப்பும் வாய்ந்தது தமிழ்மொழி. இதனுடைய பழைய இலக்கியங்களான தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் என்பன சமயச் சார்பற்றனவாகும். மனித இனத்தின் அடிப்படை உணர்ச்சியாகிய காதலைப் போற்றிப்பாடும் ‘அகப்பொருள்’ பாடல்களையும் போரையும் வீரத்தையும் போற்றிப்பாடும் ‘புறப்பொருள்’ பாடல்களையும் பண்டைத் தமிழ்ப்புலவர்கள் பாடியுள்ளனர். அவர்கள், குறிப்பிட்ட எச்சமயத்திற்கும் தம் பாடல்களில் முக்கியத்துவம் தரவில்லை. ஆனால் அன்றைய தமிழ் மக்களின் வாழ்க்கையையும், நாட்டுப்புறக் காட்சிகளையும் நகர வாழ்வின் வளத்தினையும், இயற்கை எழிலினையும் அவர்கள் ஏற்றிப் போற்றினர்.
உலக மொழிகள் பலவற்றினும் காதல் பாடல்கள் - இலக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே சங்க காலத்தின் தமிழ் அகப்பொருள் பாடல்களுக்கு என்ன சிறப்பு? எனும் எண்ணம் எழலாம். உலகின் பிற மொழிகளிலெல்லாம் ‘காதல் இலக்கியங்கள்’ எல்லாம் சிதைந்த காதலை, முரிந்த காதலை, கருகிய காதலைச் சொல்லோவியங்களாகத் தீட்டிக் காட்டுகின்றன. சங்கத் தமிழ் பாடல்களோ காதலின் வெற்றியை, காதலரின் வெற்றிமிகு இன்ப வாழ்வின் சிறப்பியல்புகளை மிகவும் நுட்பமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. ‘அன்பின் ஐந்திணை’ எனும் கோட்பாடு நிறைவேறாத காதலைப் பற்றிப் பேசவில்லை; காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவுப்பட்ட இன்ப வாழ்க்கையை ஐந்து நிலைகளாகப் பாகுபடுத்திக் காட்டுகிறது.
இலக்கியத்தில் இடம்பெறும் தமிழ்மக்களின் வாழ்க்கையை அகம், புறம் என்று பாகுபாடு செய்து, அவற்றைப் பல்வேறு நுட்பமான மனவுணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் விரித்து விளக்குவது தமிழர்க்கே உரிய பொருள் இலக்கணம் என்பதாகும். இப்பொருள் இலக்கணத்துள் அகப்பொருள் இலக்கணம் தனிச்சிறப்பு வாய்ந்தது. அவ்விலக்கண மரபையொட்டி இயற்றப்பட்டு உள்ளவையே அகப்பொருள் இலக்கியங்களாகும். அவற்றுள் காதலர் உள்ளத்தின் தூய அன்பின் திறத்தையும், உறுதி;ப்பாட்டையும், கூடல், பிரிவு, இருத்தல், ஊடல், இரங்கல் எனும் ஐவகை வாழ்க்கை நிலைகளால் பண்டைத் தமிழ்ச் சான்றோர் வெளிப்படுத்தியுள்ளனர். இவற்றையே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் எனும் திணைகளாகக் கூறுவர். இத்தகைய திணைவழிப்பட்ட அகப்பொருள் இலக்கியத்தை – காதல் பாடல்களை – உலகில் வேறு எந்த மொழியிலும் காணவியலாது.
சங்க இலக்கியம் யாவும் அரசர்களுக்காகவோ, மத குருமார்களுக்காகவோ இயற்றப்பட்டன அல்ல் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பல்வகை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வியல் பாங்குடன் மக்களுக்காக இயற்றப்பட்டனவாகும்.
சொற்சுருக்கமும், தெளிவும், இனிமையும், இன்ப எக்களிப்பும் மனித இனத்தின் உணர்ச்சித் துடிப்பும் நிறைந்த உயிரோவியங்களாக விளங்கும் இச்சங்கப் பாடல்கள் ‘செம்மொழி இலக்கியங்களாக’ப் போற்றத் தக்கன. இவற்றோடு பிண்டாரின் படைப்புகளே ஒப்பிடத்தக்கன. பிண்டாரின் படைப்புகளைக் காட்டிலும் அமைதியழகும் சொல்நயமும் வாய்ந்தனவாக இவை உள்ளன. இந்திய நாட்டு இலக்கியங்களுள் நன்கு முதிர்ச்சியுற்றதும், மக்களுடைய உள்ளத்தின் நுட்பமான உணர்ச்சிகளைச் சித்தரிப்பதும் சங்க இலக்கியம் எனலாம். சங்க இலக்கியம் மாண்புமிக்க கிரேக்கக் கலையின் வனப்பையும், நடுவுநிலைப் பண்பையும், அமைதிப் பொலிவையும் பெற்றுள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.
பழந்தமிழ் இலக்கியங்களிலே ஒப்புயர்வற்றது திருக்குறள் எனும் இலக்கியமாகும். இந்நூல் அனைத்துலக மனிதனைப் பாடுவதாகும். “அன்பு சமூக சேவையாக வளர்ந்து சிறக்க வேண்டும் எனும் கருத்து திருக்குறளிலேதான் வலியுறுத்தப்படுகிறது…. நெடுங்காலமாகத் தமிழ் நாட்டிலே வேரூன்றி வளர்ந்த கருத்துகளை அவர் (திருவள்ளுவர்) குறள் வெண்பா வடிவில் எடுத்துரைத்தார்…. செயல் மூலமாகவும் சேவை மூலமாகவும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய இயலுகிறதே! அதற்காகச் செயலில் ஈடுபடு! வள்ளுவர் இடும் கட்டளையாகும்”! என்னும் கருத்து இங்குச் சித்திரிக்கத் தக்கதாகும்.
செயலில் ஈடுபடுவதன் மூலம் மனிதனுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது எனும் கருத்து இந்திய இலக்கியங்களில் வேறு எங்கும் காண இயலாதது. இந்தக் கருத்தை வள்ளுவர் பல இடங்களிலே வற்புறுத்தியுள்ளார் என்னும் ஆய்வுரை திருக்குறளின் வாழ்க்கை மறுப்பு இன்மைக் கோட்பாட்டைக் கோடி காட்டுகிறது.
பழைய தமிழ் இலக்கியத்துள் சாதி, சமய, இன, மொழி, காலம் ஆகிய வேறுபாடுகளை எல்லாம் கடந்து உலக மக்களுக்கு என்றும் எப்பொழுதும் பயன்படத்தக்க உலகப் பொதுமறையாக விளங்குவது திருக்குறள்.
கற்போர் உள்ளத்தை உருக்கும் சிறப்புமிகு கவிதை நயத்தோடு மனித இனத்தின் அன்பினை வெளிப்படுத்துவது ‘சிலப்பதிகாரம்’ எனும் காப்பியமாகும். காப்பியப் பண்புகளை முழு நிறைவு பெற்றதாக இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழையும் முறையாகக் குழைத்துத் தருவதாக அமைந்துள்ளது இம்முத்தமிழ்க் காப்பியம். இது புகழ்மிக்க உலகப் பெருங்காப்பியங்களோடு ஒப்பாக வைத்துப் போற்றத்தக்க சிறப்புடையது என்பர்.
பௌத்த சமயத்தோடு தொடர்பு கொண்ட உலக மொழிகள் நூற்றைம்பதிற்கு மேற்பட்டனவாக உள்ளன. ஆயினும் அச்சமயத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் விளக்கும் காப்பியம் அம்மொழிகளில் இன்று இல்லை. தமிழிலுள்ள பௌத்த சமயக் காப்பயிமாகிய மணிமேகலை ஒன்றுதான் அச்சமயத்தின் தனிப்பெருங்காப்பியமாக விளங்குகிறது.
இசைக்கலை
முத்தமிழுள் இயல்தமிழ் அடைந்த வளர்ச்சியை நோக்குகின்றபொழுது இசைத்தமிழும் நாடகத்தமிழும் நன்கு வளர்ச்சியுற்றிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இவற்றின் சிறப்பு இயல்புகள் சிலவற்றை இங்கு காணலாம். இசைத்தமிழ் பண், திறம் எனும் இருவகைப் பிரிவுகளையுடையது. மாத்திரைகள் எனப்படும் 22 வகை சுருதிகளும், குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற எழுவகைச் சுரங்களும் தொன்றுதொட்டு இசைத்தமிழின் கூறுகளாகப் போற்றப்படுகின்றன.
சங்க காலத்திற்கு முன்பிருந்தே இசைத்தமிழ் வளர்ச்சியுற்றதைப் பழந்தமிழ் நூல்களால் நாம் அறிகிறோம். காலப்போக்கில் பழந்தமிழிசையில் திரிபுகளும் மாற்றங்களும் உண்டாயின. ‘கரு நாடக இசை’ எனும் புதிய பெயரினை அது பெற்றது. கருநாடக சங்கீதம் என்று வழங்கும்
தென்னாட்டு இசைக்கலை தமிழ் மக்களின் பரம்பரைச் சொத்து. சிலப்பதிகாலக் காலத்திற்கு முன்பிருந்து தமிழ்நாட்டில் இந்த இசைக்கலை உருவம் பெற்று வளர்ந்தது என்பது அறிஞர்களின் துணிவாகும். இவ்விசையினைத் தம் வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் நிலைகளிலும் தமிழ் மக்கள் போற்றி வளர்த்துள்ளனர். அதில் இனிமையும் கனிவும் அமைந்தும் அகத்தெழு உணர்ச்சி ஆன்மீக ஒலி நயத்தில் தோய்ந்தும் வெளிப்படுவதை இன்றும் கேட்டுணரலாம்.
இசை என்பது வாயினால் பாடுவது மட்டும் அன்று: கருவியால் இசைப்பதும் இசையேயாகும். பன்னெடுங்காலமாக குழல், யாழ், முழவு எனும் மூவகை இசைக்கருவிகள் பெருஞ்சிறப்புடையனவாகத் தமிழகத்தில் போற்றப்பட்டு வருகின்றன. குழலிசைத் துளைக்கருவி வகையிலும் யாழினை நரம்புக்கருவி வகையிலம், முழவினைத் தோற்கருவி வகையிலும் அடக்குவர். இவற்றுள் யாழ் என்பது வீணை எனும் இசைக்கருவி தென்னாட்டில் புகுத்தப்படுவதற்கு முன்னர்ப் பெருவாழ்வு பெற்று விளங்கியது. ஏழு நரம்புகளைக் கொண்டு சிறு யாழ் முதல் ஆயிரம் நரம்புகளைக் கொண்ட பேரியாழ் வரை பலதிறப்பட்ட யாழ்க்கருவிகளைப் (சகட யாழ், செங்கோட்டி யாழ், வில் யாழ், மகர யாழ், பேரியாழ் முதலியன.) பண்டைத் தமிழர் இசைத்து மகிழ்ந்தனர். வீணையில் எழுப்ப இயலாத சுரங்களையெல்லாம் யாழிலே இசைத்து நம் முன்னோர்கள் இன்புற்றனர். இந்திய இசைக்கருவிகளுள் யாழுக்கும் அதன் இசைக்கும் தனி இடம் உண்டு.
இன்று தமிழகத்தில் சிறப்புற்று விளங்கும் வீணை யாழினை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த வளர்ச்சிக்கேற்பச் சில மாற்றங்களோடு அமைத்துக் கொள்ளப்பட்ட இசைக்கருவியாகும். வீணை முதலில் யாழ் போன்று இருந்து படிப்படியாக இன்றைய வளர்ச்சி அடைந்தது என்பது இசையியலறிஞர்களின் துணிவாகும். தமிழகத்து மக்களே, இன்றும் வீணையை இசைப்பதில் தலைசிறந்த கலைஞர்களாக ஆராய்ச்சியின் மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளனர். எனவே பழந்தமிழிசை இன்று கருநாடக சங்கீதமாகவும் பண்டைத் தமிழகத்து இசைக் கருவியான யாழ் இன்று வீணையாகவும் மாற்றமும் வளர்ச்சியும் பெற்றுள்ளதை யாரும் எளிதில் புறக்கணிக்க இயலாது.
நாட்டியக்கலை
தமிழகத்தின் மற்றொரு சிறப்புமிக்க கலை பரத நாட்டியம். இக்கலையே, பல்வேறு கலைகளுக்கு அடிப்படையாகவும், மூலமாகவும் இருந்து வருகிறது. உள்ளத்தில் உண்டாகும் உணர்ச்சிகளையும், கருத்துகளையும் உடல் உறுப்புகள் வாயிலாகப் புறத்தார்க்குப் புலப்படுத்துவதே நாட்டியக் கலையின் நோக்கம். முகக்குறிப்பு, கண்குறிப்பு, கைக்குறிப்பு என்னும் பகுதிகளைக் கொண்ட நாட்டியக் கலையோடு இசைக்கலையைக் கலந்து பேரின்பத்தை அளிக்கிறது பரதநாட்டியம். எண்வகை மெய்பாடுகளே இக்கலையின் உயிர்நாடி. இக்கலை கோயிலில் பயன்படுத்தப்படும் சிற்பக்கலை, படிமக்கலை, இசைக்கலை ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்பும் இசைவும் கொண்டது. இதனைப் போற்றி வளர்த்துவருவது மட்டும் அல்லாமல் இன்றைக்கு அக்கலைக்கு ஒரு புதுவாழ்வினை அளித்து, உலகப் பெருங்கலையாக அதனை மாற்றி வருகின்றவர்களும் தமிழர்களேயாவர்.
இவவழகுக்கலை தோன்றி வளர்ந்தது தமிழ்நாட்டில். ஆனால், இசைக்கலையின் நுட்பத்தை அறிவியல் முறைப்படி ஆராய்ந்து, நாட்டியச சாத்திரத்தை பரதர் என்னும் கலைஞர் வடமொழியில் எழுதியுள்ளார். நாட்டியம் எனும் சொல் ‘நிருத்’ எனும் திராவிடமொழியின் வேர்ச்சொல்லிலிருந்து நிருத்த, நிருத்திய, நாட்டிய என்று திரிந்திருப்பதாக மொழியில் அறிஞர்கள் கருதுகின்றனர். மேலும் பரதமுனிவர் தென்னாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஆரியர் அல்லாத இந்தியப் பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்தவர் என்றும், தம் காலத்திய நிலைமைக்கேற்ப வடமொழியில் நாட்டிய சாத்திரத்தை அவர் இயற்றியருளினார் என்றும் வடமொழி நாடக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தென்னாட்டில் நாட்டியக்கலை தெய்வீகக் கலையாகப் போற்றி வளர்க்கப்பட்டு வருவதைக் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் எடுத்து இயம்புகின்றன. இக்கலையின் தனிச் சிறப்பை, இந்தியாவில் வளர்க்கப்பட்டுள்ள நாட்டியக் கலைகள் அனைத்திலும் பரத நாட்டியக் கலை தலை சிறந்ததாகும். இதனுடைய தொன்மைச் சிறப்பும் ஏற்றமும் எழிலும் பிற நாட்டியக் கலைகளில் காணப்படவில்லை. பரத நாட்டியத்தின் மேன்மையையும் சிறப்பையும் அதனுடைய பெண்களாகக் கருதத்தக்க இந்தியாவின் பிற நாட்டியக்கலைகளில் காண்பது அhது என்று பரத நாட்டியக்கலையின் தன்னிகரற்ற தலைவியாக விளங்கும் திருமதி ருக்குமணிதேவி மொழிந்துள்ளமை இங்குக் கருதத்தக்கது.
நாட்டியத்தோடு கதையும் பாட்டும் இணைந்து வளர்ந்தபொழுது, நாடகம் வளர்ந்தது. இதைக் கதை தழுவிய கூத்து என்பர். இது இரு வகைப்படும். அகக் கூத்து, புறக் கூத்து என்பது ஒருவகை. சாந்திக் கூத்து, விநோதக் கூத்து என்பது மற்றொரு வகை. இவை ஒவ்வொன்றும் பல்வேறு வகை உறுப்புகளை உடைத்தாய் இருந்தன. இவற்றை வேத்தியல், பொதுவியல் எனவும் பாகுபடுத்துவர். வேந்தனது அவையில் நடிப்பதற்குரிய தகுதியும், கலைச்சிறப்பும் வாய்ந்தது வேத்தியல். பாமர மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் ஆடப்பட்ட ஆடல்களும், சமயச் சடங்குகளோடு இணைந்த கூத்துகளும் பொதுவியல் எனப்பட்ட வரிக்கூத்துகளும் பதினோராடல்களும் இத்தகையனவாகும்.
சிற்பக்கலை
நம் இந்தியக் கலையின் முழுமையான வளர்ச்சியில் திராவிட மக்களின் கலைப்படைப்புகள் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. எளிதில் வேறுபாட்டைக் கண்டறியக்கூடிய வகையில், திராவிடக் கலைப்பாணி தற்சார்புடைய தனி இயல்புகளையும், சுவையுணர்வுகளையும் உடையதாய் இருந்து வருகிறது. இவ் வேற்றுமைப் பண்புகளைச் சிறப்பாக நம் கட்டடக்கலையிலும் தெய்வத் திருமேனிகளை வடிக்கும் படிமக் கலையிலும் மிகப் பேரளவில் காணலாம். இவை, இந்தியா முழுமைக்கும் பொதுவான சமயத் துறைப்பயன் பாதிப்புகளையும் உருவச்சிலை வடிவக் கூறுகளையும் முற்றிலும் புறககணித்துவிடவில்லை என்பது உண்மை. ஆயினும், திராவிடக் கலை முறையில் தனிச் சிறப்புமிக்க, கலைப்பாணிகளும், உருவச்சிலைகளின் அமைப்பில் இந்தியாவின் வேறெந்த பகுதியிலும் காண இயலாத இயக்கமும் நெகிழ்வும் நொசிவும் கொண்ட சிறப்பியல்புகள் இடம்பெற்றுள்ளதை நாம் கருத்தில் இருத்த வேண்டும்.
இந்தியக் கலையின் பல்வேறு பகுதிகளோடு திராவிடக் கலையின் வளர்ச்சியைத் தொடர்புபடுத்தாமல், அதைத் தனியாகத் தென்னாட்டு வரலாற்றின் அடிப்படையில் ஆராய்கின்றபொழுது, திராவிடக் கலை இயல்புகள் மிகப் பேரளவில் தெளிவும் பொலிவும் பெற்றுத் தனிச்சிறப்புடன் ஒளிர்கின்றன.
தமிழ்நாட்டுக் கோயில் சிற்பங்கள் உலகத்தையே இன்று வியப்படையச் செய்துள்ளன. கால இடையீடில்லாமல் இங்குத் தொடர்ந்து வளர்ச்சியுற்றிருப்பதைக் காணுகின்றோம். பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து, சிற்பக் கலை போற்றி வளர்க்கப்பட்டதன் விளைவாக யாதொரு கட்டுப்பாடுமின்றி இயங்கும் வடிவங்களைப் படிப்படியாக அமைக்கத் தமிழகச் சிற்பிகள் கற்றனர். துணிபுமிக்க ஆக்க வேலையும், சரியான இசைவுப் பொருத்தமும் கண்டாரை வியப்படையச் செய்யும் வகையில் திராவிடச் சிற்பங்களில் இடம் பெற்றிருக்கின்றன. சிற்பங்களை வடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் யாதாக இருந்தாலும், அதில் ஒரு குழைவுத் தன்மையையும் நெளிவு சுளிவுகளையும் நாம் காணுகிறோம். நெகிழ்ச்சியும், இழைவும், குழைவும், அழுத்தமின்றிப் பரவலாகக் கலை நுட்பத்தைப் பயன்படுத்தலும் திராவிட சிற்பக்கலையின் முதன்மையான இயல்புகளாகும். மண்ணக வாழ்வை அடிப்படையாகக் கொண்டு, விளக்கத்தை நோக்கிச் செல்லுவதாகத் தமிழருடைய சிற்பக்கலை விளக்குகிறது. திராவிடக் கலையியலில் கலையுணர்வைவிட சமயவுணர்வு சிறப்பிடம் பெற்றுள்ளதை யாரும் மறுக்க இயலாது. அழகினைத் தூய்மையின் மூலந்தான் பெறமுடியும் என்ற நம்பிக்கை தமிழகத்துச் சிற்பிகளிடத்து நெடுங்காலமாக இருந்து வருவதை அவை அறிவிக்கின்றன.
மாமல்லபுரத்துச் சிற்பங்கள் கல்லிலே இழைக்கப்பட்ட காப்பியங்களாகும். பல்லவர் சிற்பக் கலையில் அடைந்த மாபெரும் வெற்றிக்கு – சாதனைக்கு, இவை அழியாப் பெருஞ்சான்றுகளாகும். பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், தென்னிந்திய சிற்ப வடிவங்களின் களஞ்சியமாகக் காட்சி தருகின்றன. அவை அக்கமான கவின்மிகு கலைப்பாணி உடையன. பெரிதும் பயன்படுத்தாத இயற்கையும் அதில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், அது தென்னிந்திய சிற்பக் கலையின் தனிச்சிறப்பு மிக்கப் பண்பாக விளங்குகிறது.
கங்கையின் தோற்றம் எனும் பாறைச் சிற்பங்கள் பல்லவர்களுடைய கலைச் சிறப்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். பல்லவர் கலைப் பாணியில் அமைந்த சிற்பங்களுள் இவை முக்கியமானவை. மான், குரங்கு, யானை, எருது போன்ற சிற்பிகளின் கைவண்ணத்தால் பொன்றாப் பெருவாழ்வைப் பெற்றுள்ளன. விலங்குகளின் உடற்கூற்று அமைப்பழகில் இத்தகைய உயிர்க்களையும், நிகழ்வியல் பாங்குமிகு அமைதியும், அருளுணர்வோடு அமைந்த கலை முறையையும் இந்தியாவில் வேறெந்தப் பகுதியிலும் நாம் காண்பது அரிது. புதுமையும் அழகும் பொருந்திய கலையியல் கொள்கை கைவரப்பெற்று இந்தியக்கலை இங்குத் தான் முழுமலர்ச்சி அடைந்துள்ளதைக் காணுகின்றோம். மனித வடிவின் இலட்சியத் தோற்றம் பல்லவர்களுடைய கலைப் படைப்புகளிலே தலைசிறந்து விளங்குவதோடு இந்திய சிற்பங்களிலே ஒப்புயர்வற்றதாகவும் உள்ளத்தை நெகிழ்விப்பதாகவும் உள்ளன.
நிலைபேறற்ற உலகியல் வாழ்வில் நிலையான மதிப்பினைச் சோழர் காலத்திய சிற்பங்கள் பெற்றுள்ளன. ஆடையணிகள் உடலோடு பொருந்தியுள்ள காட்சி உடலுக்கு இயல்பான பொலிவை அளிப்பதோடு நுட்பமான கலைநயம் பொருந்தியனவாக உள்ளன. வடிவங்களின் அமைவு முறையில் கலையழகு நாட்டமும், உடலுறுப்புகளின் நெளிவு சுளிவுகளில் உள்ள நேர்த்தியும் நெகிழ்ச்சியும் சிறப்புமிக்கன. இவற்றோடு ஒருவகைப் புதுமை பொலிவும் சேர்ந்து சோழர்கால சிற்பக் கலைக்குப் பொன்றாப் புகழைத் தேடித் தந்துள்ளன.
திருக்கோயில்களின் கருவறையைச் சுற்றிலும் வெளிச்சுவர்களிலுள்ள மாடங்களில் பல தெய்வத் திருமேனிகள் சோழர் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கங்கைகொண்ட சோழீச்சுரத்தின் தெற்குச் சுற்றாலையில் கலைமகளின் கவின்மிகு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அச்சிற்பம் நல்ல பெருமிதமான தோற்றம் கொண்டது; அமைதி தவழும் அழகிய வடிவம் வாய்ந்தது; நீண்டுயர்ந்த மணிமகுடம் அதன் தலையை அழகுபடுத்துகிறது. வெள்ளைத் தாமரையில் அவள் வீற்றிருக்கும் கோலம் காண்பவர் கண்ணிற்கும் கருத்திற்கும் நல்விருந்தாகும். இது புடைப்புச் சிற்ப முறையில் அமைந்திருப்பதால் பேரழகுடன் பொலிவுறுகிறது.
திருவரங்கத்தில் வேணுகோபாலன் கோயிலின் தெற்கு சுற்றாலையில் உள்ள ஒரு மாடக்குழியிலே, கல்லில் கற்பனைப் பெண் ஒருத்தி நிற்கின்ற நேர்த்தி கையில் கண்ணாடி ஏந்தியிருக்கின்ற எழில், அணிந்திருக்கும் அணிகளின் அழகு, இதழ்களிலே தவழும் புன்னகையாகிய அனைத்தும் காண்பவரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவனவாகும். இதைப்போன்ற எண்ணற்ற சிற்பங்கள் இக்காலத்திய கலைப்பாணியின் ஏரையும் எழிலையும் உலகிற்கு உணர்த்துகின்றன.
கட்டடக்கலை
இந்தியக் கட்டடக்கலை முறையில், தமிழ்நாட்டுக் கட்டடக்கலை தனிச்சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது.
தென்னிந்தியக் கட்டடக்கலை முறையைத் திராவிட கட்டடக்கலை முறை என்பர் மு.வே. தூப்ராய். தமிழகம் திருக்கோயில்கள் நிறைந்த திருநாடு. அத்திருக்கோயில்களினுடைய விமானங்களின் அமைப்பும் அழகும் தமிழகத்திற்கேயுரிய புதிய கலைப்பாணியை அடிப்படையாகக் கொண்டுள்ளன. பிரமிட் போன்ற தோற்றத்தோடு வானுற உயர்ந்து விளங்கும் விமானங்களையும் கோபுரங்களையும் திராவிடக் கலைப்பாணியைச் சேர்ந்தவை எனப் பழைய சிற்ப நூல்களே கூறுகின்றன. கோயில் கட்டடக்கலை பல்லவர் காலத்தில் குகைக்கோயில்களாக அரும்பி சோழர் காலத்தில் விண்ணைத் தீண்டித் தழுவும் மாபெரும் கோயில்ளாக மலர்ச்சியுற்றது பல்லவர் காலத்திய கோயில்கள் எளிமையின் எதிலும் அடக்கமான அமைப்பு முறையின் அழகும் உடையன. மண்டகப்பட்டு திருச்சிராப்பள்ளி மாமல்லபுரம் முதலிய இடங்களில் உள்ள குகைக்கோயில்களும் மாமல்லாபுரத்தில் ஒற்றைக் கல்லினால் அமைக்கப்பட்டுள்ள பஞ்சபாண்டவர் தேர்களும் இத்தகையனவாகும். பல்லவர் காலத்திய கட்டுமானக் கோயில்களுள் மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயிலும் காஞ்சியிலுள்ள கைலாசநாதர் கோயிலும் வைகுந்தப் பெருமாள் கோயிலும் கோயில் கட்டடக் கலையின் வளர்ச்சியினை அறிவிப்பனவாகும். கட்டடக்கலைப்பாணியின் எளிமையும் அதே சமயத்தில் நேர்த்தியும் வாய்ந்தனவாகத் தமிழகத்துக் கட்டடக்கலை முன்னேற்றம் கண்டதை இக்கோயில்கள் தெரிவிக்கின்றன.
சோழர் காலத்திய கோயில்களின் அமைப்பு முறையில் வீறும் ஊற்றமும், அணியழகின் கலை நயமும், தொழில்நுட்பச் சிறப்பும் மேம்பட்டு விளங்குகின்றன. மாபெரும் விமானங்கள் எளிமையான எழிலைச் சிறிதளவும் இழக்காது. பெருமிதத் தோற்றத்தோடு பேரழகுப் பிழப்பாகப் பொலிகின்றன.
இப்புதிய கலைப்பாணியின் மாண்புமிக்க வடிவமாக விளங்குவது தஞ்சைப் பெருவுடையார் கோயில். இக்கொயிலின் விமானம் எகிப்திய பிரமிடுகளைப் போன்று மாபெரும் வடிவமாகப் பெருமிதத் தோற்றத்தோடு காணப்படுகிறது. அவ்விமானம் திண்மையும் உறுதியும் உடையதாய், என்றும் நிலைபெற்று விளங்கும் என்னும் நம்பிக்கையூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே, இதுவரை வகுத்தமைக்கப்பட்டுள்ள கோயில் விமானங்களில் நிலையான கட்டுக்கோப்புடையதாகக் காணப்படுவது தஞ்சை பெருவுடையார் கோயில் விமானமேயாகும். திராவிடக் கட்டடக் கலைஞரின் நேர்த்திமிக்க படைப்புகளுள் சிறிதளவும் ஐயத்திற்கு இடமின்றித் தலைசிறந்து விளங்குவது இக்கோயிலாகும். தஞ்சைக் கோயிலின் விமானம், இந்தியக் கட்டடக் கலையின் மாட்சியினை அறிய ஓர் உரைகல்லாகவும் விளங்குகிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் போன்ற, ஆனால் சிறிது அடக்கமான அளவில் இராசேந்திர சோழனால், கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டப்பட்டுள்ள கங்கை கொண்ட சோழீச்சுரம் தஞ்சைக் கோயிலின் கலைப்பணியைப் பெரிதும் பின்பற்றி அமைக்கப்பட்டதாகும். ஓரளவிற்கு அதன் அமைப்பு முறைகளிலும், கட்டடக்கலை நயத்திலும் நுட்பமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் ஆண்மையின் வீறு மேலோங்கி நிற்கிறது என்றால் கங்கைகொண்ட சோழீச்சுரத்தில் பெண்மையின் பேரெழில் பொங்கி வழிகிறது எனலாம்.
தாதாசுரத்திலுள்ள ஐராவதேசுவரர் கோயிலும் திருபுவனத்திலுள்ள கம்பேசுவரர் கோயிலும் சோழர் கலைப்பாணியின் பிற்கால இயல்புகளை நன்கு புலப்படுத்துகின்றன. இவற்றில் நுணுக்கமான வேலைப்பாடுகள் மிகுதியாக வளர்ந்துள்ளன. கோயில்களின் தலைவாயிலில் விண்ணை முட்டும் கோபரங்கள் சிற்பக்கலைக் களஞ்சியமாக விளங்குகின்றன. இத்தகைய கோபுரங்களைச் சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை முதலிய ஊர்களிலுள்ள கோயில்களிலும் காணலாம்.
படிமக்கலை
தமிழகத்தின் கலைப்படைப்புகளில் வெண்கலச் சிலைகள் கலைசிறந்தவை; தன்னிகரற்றவை. இந்தியாவிலேயே, தமிழகத்துச் சிற்பிகள் இத்துறையில் ஈடும் இணையுமற்ற மாபெரும் சாதனைகளைப் புரிந்துள்ளனர். கற்சிற்பங்களைப் போலவே இவையும் மிகத் தொன்மையான கலைமரபினைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளன. இவ்வெண்கலச் சிலைகள், சோழர் காலத்திலேயே, மிகப் பேரளவில் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் அழுத்தம், பெருமிதம், அடக்கமான நுண்ணயமிக்க வேலைப்பாடு, உயிர்த்துடிப்பு முதலிய பண்புகள் பொருந்தியுள்ளன. அவற்றின் நிலையிலும் இயற்கை எழில் முழுமைத் தன்மையுடையதாய்ப் பொலிவுறுகிறது. அணிகள் அழகாகவும் அளவாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தி நெறியையும் அதனால் ஏற்படுவனவாகிய மனவுனர்ச்சிகளையும் இத்திருவுருவங்கள் மிக நயம்பட விளங்குகின்றன. உண்மையான பக்தியில் ஈடுபட்டுள்ள ஓர் அடியாரது உள்ளமும், உடலும் எந்நிலையில் இருக்கும் என்பதைத் தமிழகத்து அருளாளர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலியோருடைய உருவச்சிலைகள் தெளிவாக உணர்த்துகின்றன.
அம்பலவாணரின் அருள் வடிவம், பேரின்பமாகிய சிவானுபவத்தை பேரின்ப நுகர்ச்சியைக் குறிக்கிறது. மேலும் சிவபெருமானே படைத்தல், காத்தல், அருளர், இறைத்தல், அழித்தல் எனும் ஐந்து தொழில்களையும் முறையே நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவம் எனும் ஐவகை மூர்த்திகளின் மூலுமாகச் செய்து வருகிறான் என்பதையும் இத்திருவுருவம் உணர்த்துகிறது. உடுக்கை ஏந்திய கை உலகப் படைப்பையும் அருள்புரியம் கை காத்தலையும், தீயேந்திய கை மும்மலத்தையும் அழிப்பதையும், ஊன்றிய திருவடி ஆன்மாக்களை மறைத்தலையும், தூக்கிய திருவடி ஆன்மாக்களின் புகலிடம் இதுவெனக் காட்டுதலையும் குறிப்பதாக, நடராசப் பெருமானின் திருமேனியின் அமைப்பையும் அழகையும் மெயப்பொருள் சார்பான நோக்கில் விளக்குவது பண்டைத் தமிழர் மரபு. “இறைவன் உயிர்த்துடிப்பாகவும், ஒழுங்கான இயக்கமாகவும், அழியாத இளமை எழிலாகவும்; கட்புலனாகாப் பேரொளியாகவும் விளங்குகிறான் என்பதையே இந்நடராசத் திருவுருவம் உணர்த்துகிறது… சமயச் சூழ்நிலையில் இவ்வடிவத்தின் உட்பொருளை ஒருமுறை புரிந்துகொண்டால் நடராசப் பெருமானின் அழகிய திருவுருவத்தில் ஐரோப்பியர்கள் கூட உண்மையான சமய உணர்வினைப் பெறமுடியும். தெய்விக உண்மையையும், தெய்விக அழகையும், தெய்விக இன்பத்தையும் உணர்த்தும் கலைப்பிழப்பே பேரெழில் வாய்ந்த நடராசர் திருமேனி” என்பது இக்காலத்திய மேற்கு நாட்டு அறிஞர் ஒருவரின் கருத்தாகும்.
இந்திய நாகரிகம் என்றவுடன் உலக அறிஞர்கள் பலருடைய உள்ளத்தில் தமிழ்க்கலைஞர்கள் ‘இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்ற எழுதிக்காட்ட’ இயலாத இறைவனுக்குக் கற்பித்த நடராச வடிவே தோன்றுவதாகக் கூறுகின்றனர். எனவே, “ஒரு கூட்டத்தாருக்காவது, ஒரு நூற்றாண்டைச் சேர்ந்த சிந்தனையாளர்க்காவது ஏற்புடைததாகலின்றி, எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும், இறையன்பர்களாலும், கலைஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் வண்ணம் மெய்ப்பொருள் குறிப்பும் சமய உணர்வும், கலையழகும், அறிவியல் கொள்கையும் இணைந்தும் இழைந்தும் விளங்கும் பேரெழில் மிக்க, கலைப்பிழம்பாகிய இவ்வடிவத்தை முதலில் தமது உள்ளக் கிழியிலே வரைந்த மெய்யுணர்வு பெற்ற கலைஞர்களின் ஆழ்ந்த சிந்தனைத் திறனும் அருளுணர்வும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன”
இவ்வரிய நாகரிக இயல்புகள் யாவும் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பியல்புகளாகும். இந்தியப் பண்பாட்டின் ஏற்றத்திற்கும் ஊற்றத்திற்கும் தமிழ்மக்கள் அரும்பெரும் பணிகளை வாழ்வின் பல்வேறு துறைகளிலும் ஆற்றியுள்ளனர். இன்றைய இந்து நாகரிகத்தில் - இந்திய நாகரிகத்தில் - தமிழ்ப் பண்பாட்டின் இயல்புகளும் கூறுகளும் இரண்டறக் கலந்து விட்டன. இதனால் எளிதில் இனங்கண்டுகொள்ள இயலாத வல்லார்க்கும், பகுத்தாய்ந்து பார்ப்போர்க்கும், ஆழ்ந்து சிந்திக்கும் திறன் வாய்க்கப் பெற்றோர்க்கும் தமிழ்ப் பண்பாட்டின் தனிச்சிறப்பும், இந்திய நாகரிகத்தினை உருவாக்குவதில் அதற்குரிய
திராவிடப் (தமிழ்) பண்பாட்டோடு ஆரியப் பண்பாடு ஒன்றாக இணைந்தமையால் தோன்றியதே இந்திய நாகரிகம். திராவிடப் (தமிழ்) பண்பாட்டின் தாக்கத்தால் இந்திய நாகரிகம் செழுமையும் சிறப்புற்றது; அகலமும் ஆழமும் அடைந்தது.
அகமுகவுணர்வோ, புலன்கடந்த நுண்பொருள் ஆய்வு உணா்வோ திராவிடரிடம் மேலோங்கி நிற்காமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் கலையுணர்வுமிக்க கலைஞர்கள்; ஆடலிலும் பாடலிலும் ஈடு இணையற்றவர்கள்; கவின்மிகு கலை வடிவங்களைத் திட்டமிட்டு வகுப்பதிலும், வியத்தகு கோயில்களைக் கட்டுவதிலும் அவர்கள் கைதேர்ந்த கலைஞர்கள்; உணர்ச்சி செறிவும், படைப்புத் திறனும் வாய்ந்த திராவிட (தமிழ)ரின் கலையுணர்வை ஆரியரின் அப்பாலைத் தத்துவம் மணம் புரிந்ததனால் பிறந்த மழலைச் செல்வமே இந்திய நாகரிகம் என்று இரவீந்தரநாத் தாகூர் மொழிந்துள்ளமை அரண் செய்கிறது.










Comments
Post a Comment