இலக்கியத்தின் உயிர்

-.ஜீவானந்தம்

            வரலாற்றில் பொருளை அறிகிறோம். இலக்கியத்தில் அதை உணர்கிறோம். வரலாற்றில் அதைக் கற்கலாம். ஆனால் கதையில் அல்லது கவிதையில் அதைக் கற்பதைவிட அனுபவிக்கிறோம்.

            வான நூலார் சந்திர மண்டலத்தை ஆராய்ந்து பல உண்மைகளைக் கண்டறிகிறார்கள். ஆனால் சிறு குழந்தைகள் அம்புலியைக் கண்டு ஆனந்தக் கூத்தாடுகின்றனர் ஆராய்வதில்லை. தாவர நூலார் ஆய்வுக்கூடத்தில் செடி, கொடிகளை அறுத்து அக்குவேறு அலகுவேறாகப் பிரித்து, அதனுள் பொதிந்து கிடக்கும் உண்மைகளைத் தேடுகிறார்கள். ஆனால், “தன் தாயின் கல்லறையில் படர்ந்துள்ள கொடிகளைப் பார்த்ததும் தாவர ஆராய்ச்சியில் இறங்குவதுண்டோ?”என்று ஆங்கில நல்லிசைப் புலவரான ஓர்ட்ஸ்வொர்த் கேட்கிறார்.




            ஒரு பிஞ்சுக் குழந்தையை, ஒரு உடற்கூறு ஆராய்ச்சி வல்லார் சோதித்து,‘ஒன்றரை அடி உயரம் 20 அங்குலம் சுற்றளவு, பதின்மூன்று ராத்தல் எடை உள்ள ஒரு தசைப்பிண்டம்என்று கூறலாம். ஆனால் பெற்ற தாய் அப்படியா கூறுவாள்? மறந்தும் கூறமாட்டாள்.

                        சீரங்கம் ஆடி

                        திருப்பாற்கடலாடி

                        மாமாங்கம் ஆடி

                        மாசிக் கடலாடி

                        தைப்பூசம் ஆடி

                        தவம்செய்து பெற்ற கண்ணே

என்று அன்பு சொரிந்து அள்ளி எடுப்பாள்!

            சைக்கிள் வண்டியை ஒரு பொறியியலார் பார்த்தால், ஒரு சக்கரத்தின் பின் மற்றொரு சக்கரம் ஒழுங்காய் சுழன்று செல்வதையும், அதன் அமைப்பையும் கண்டு ஆராயத் தொடங்குவார். ஆனால் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அப்படியா செய்கிறார்? அல்லஅவர்,



                        அக்காளும் தங்கையும் போல்

                         அவை போகும் அழகைப் பார்

என்று அதைப் பார்த்துக்கொண்டே சொக்கி நின்றுவிடுகிறார்.

            சாதாரண நிலையில் ஒரு பெண்ணைப் பார்க்கும்பொழுது அவள் மானிடப் பிறப்பின் சின்னமாகத் தோன்றுகிறாள். ஆனால் மனம், உணர்ச்சிவசப்பட்டுக் கிடக்கும்பொழுது அதே பெண்,

                        ஞானத் திருவடியாய்

                                    இன்ப மதுக்குடமாய்

                         கான மதுகரமாய்

                                    கண் நிறைந்த பேரழகாய்

                         காட்சியளிக்கிறாள்

எனவே, இலக்கியத்தின் உயிர் உணர்ச்சிதான்.

            தலைசிறந்த கலைஞன் பாத்திரத்தில், நிகழ்ச்சியில் தன்னை மீதமிச்சமின்றிக் கரைத்துவிடுகிறான். உணர்ச்சியின் சிகரத்தில் நின்றுகொண்டு பாத்திரமே, நிகழ்ச்சியே, குறிக்கோளைப் பாடுவது போன்று, எழுதுவது போன்று பாடுகிறான்; எழுதுகிறான்.

            அவனிடம்யான்!’,‘எனதுஎன்னும் செருக்கு இல்லை. எனவே, அவன்வானோர்க்கு உயர்ந்த உலகம்புகுந்து விளங்குகிறான்.

            அவனுக்கு அன்பின் வழியேஉயர்நிலை. அவனுக்குமக்கள் பண்பேபெரிது. வள்ளுவப் பேராசானும் அதைத்தானே வலியுறுத்துகிறான். ஆகவே,‘அறம்; போன்ற கூரியஅறிவால்,‘மக்கட் பண்பைப்புறங்காணும் புன்முயற்சியில் ஈடுபடமாட்டான். அறிவுத்திறனைக் காட்டுவதுதான் இலக்கியகலைப்பணி என்று கருதமாட்டான். நெஞ்சுக்கனிவை மேன்மேலும் வெளிப்படுத்துவதற்கே முதலிடம் கொடுப்பான்.

            கலைஞன்யான்,‘எனதுஎன்ற அகங்காரத்தைக் கரைத்து, கலை உருவின் பயனாகிவிடுகிறபொழுது, ஒரு துளி கடலாகி விடுகிறது.

            ஒரு பாரசீகப் புலவனின் உவமானத்தால் இதை விளக்கிக் கூற விரும்புகிறேன்.

            ஒரு நாள் இரவில் சில வண்ணத்துப் பூச்சிகள் ஒன்று கூடின. அவை விளக்கின் ஒளி பொருந்திய சுவாலையோடு ஐக்கியமாகிவிட வேட்கை கொண்டன. ஆனால், தீக்கொழுந்தின் தன்மையை யாராவது சென்று பார்த்து வந்தால் நல்லது என்று முடிவு கட்டின. உடனே ஒரு வண்ணத்துப்பூச்சி எதிர் வீட்டிலிருந்த விளக்கு அருகே சென்றுவிட்டுத் திரும்பி வந்தது. தான் கண்ட விளக்கொளியை அது விரித்துக்கூறத் தொடங்கிற்று. ஆனால், அந்த வண்ணத்துப்பூச்சிகளின் தலைவனான பூச்சி, விளக்கின் சுவாலை பற்றிய உண்மையான ஞானத்தை அதுபெறவில்லை என்று சொல்லிவிட்டது.

            எனவே, மீண்டும் மற்றொரு பூச்சி சென்றது. அது, விளக்குச் சுவாலையின் வெப்பம் தன்மீது படும் அளவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியது. அதனுடைய சுவாலையைப் பற்றிய விளக்கமும் திருப்தியற்றதாகவே இருந்தது.

            ஆகவே, மூன்றாவதாக வேறொரு வண்ணத்துப்பூச்சி சென்றது. அது விளக்கின் சுடரினுள்ளே நுழைந்துவிட்டது. அதனால் அதன் உடலும் எரிந்து நெருப்பாயிற்று. அந்தப் பூச்சியும் நெருப்பும் ஒன்றாயின.



            இதைக் கண்டதும், தலைவனான வண்ணத்துப்பூச்சி கூறிற்று:

            அந்த வண்ணத்துப்பூச்சி, தான் அறிய வேண்டியதை அறிந்து கொண்டது. தன் வாழ்வை அறவே கரைத்துவிடுகிற பொழுதுதான் லட்சியத்தை அடைய முடியும்.‘யான்,‘எனதுஎன்ற செருக்கைக் கரைக்கும் வரையில் அன்பின் தகுதியை நீ அறிய முடியாது.

            பரீதுத்தீன் அத்தார் மேற்கூறிய உவமானத்தில் காட்டியுள்ளபடிதன்னைக் கரைத்துக்காணும் காட்சி பெறாத வரையில், கலை வாழ்வில் வெற்றிபெற முடியாது; கலைஞனைக் காணும் தௌ;ளிய பார்வையும் கை வராது. நிறைய படிப்பதெல்லாம், துருவித் துருவிப் பார்ப்பதெல்லாம் ஒருவனைப் பண்டிதன் ஆக்;கிவிடும்; அவ்வளவுதான்.

                        அணிசெய் காப்பியம்

                         ஆயிரம் கற்பினும்

                         ஆழ்ந்திருக்கும்

                         கவியுளம் காண்கிலார்

என்ற பாரதி வாக்கு சிந்தித்துச் சிந்தித்துச் சீர் தூக்கத்தக்கது.

            ரோமன் ரோலான் என்ற பிரெஞ்சு நாட்டுப் பெருங்கலைஞன், கீழைய, மேலைய நாட்டுப் பண்பாடுகளுக்குப் பாலம் இட்டவன்.

            உலகப் பண்பாட்டிலும் மனிதனிடத்திலும் பெரும் நம்பிக்கை கொண்டவன். இந்த நூற்றாண்டில் தலைசிறந்த உலகச் சான்றோர்களில் ஒருவனான அவன், தான் எழுதியவிவேகானந்தரும் உலக வேதமும்என்ற நூலை முடிக்கும்பொழுது பின்வருமாறு கூறுகிறான்:



            கடவுள் தமது படைப்புகளில் ஆகச் சிறந்த அழகிய படைப்பான ஏழாவது நாளை மனிதனுக்கு அருளினார். உறங்கிக்கிடக்கிற கட்டுண்ட ஆத்ம சக்திகளை விடுதலை செய்! மனிதனில் வாழும் கடவுளைத் திரும்பவும் விழிப்படையச் செய்! வாழ்வையே மீண்டும் புதுமையாகப் படை! என்று கூறி ஏழாவது நாளை அருளினார்.

            கலை உள்ளம் உணர்ச்சியின் கொடுமுடியில் நின்றால் எவ்வாறு ஒலிக்கும் என்பது இங்குக் காணக்கிடக்கிறது.

            கவிஞர்கள் தங்களுடைய அறிவுத் திறத்தால் அன்று கவிதைகளைப் படைக்கிறார்கள், படிக்கிறவர்கள் உணர்ச்சியும் ஊக்கமும் ஊட்டவல்ல, தங்களிடமுள்ள குறிப்பிட்ட இயல்பால் அல்லது மேதையாலேயே கவிதைகளைப் படைக்கிறார்கள்என்ற சாக்ரடிஸின் கருத்தை விமர்சகப் பேரறிஞரான அபர்க்ரோம்பி, தாம் எழுதியஇலக்கிய விமர்சனத்தில் தத்துவங்கள்என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

            இதையே, ஓட்ஸ்வொர்த்தும்,“ஆற்றலும் விழுப்பமும் வாய்ந்த உணர்ச்சிகள் தன்னிச்சையாகக் கரை புரண்டோடுவதுதான் கவிதைஎன்று சொல்கிறார்.

            இந்த உண்மைகளை மனத்திற்கொண்டு கம்பனின் காப்பியம் ஒரு கலைஞரை என்ன பாடுபடுத்தியிருக்கிறதென்று பார்க்க வேண்டும். கம்பன் காப்பியம் முழுவதையும் நன்றாக மென்று மென்று சுவைத்த அவர்,

                        இம்பர் நாட்டில் செல்வமெலாம்

                         எய்தி அரசாண்டிருந்தாலும்

                         உம்பர் நாட்டில் கற்பகக்கா

                         ஓங்கு நீழலிருந்தாலும்

                         செம்பொன்மேரு அனைய புயத்

                         திறல்சேர் இராமன் திருக் கதையில்

                         கம்பநாடன் கவிதையைப் போல்

                         கற்றோர்க் கிதயம் களியாதே

            மண்ணுலக விண்ணுலகங்களில் உள்ள எந்த இன்பமும்,“கம்ப நாடன் கவிதையைப்போல் கற்றவர்களின் நெஞ்சத்திற்கு மகிழ்ச்சி ஊட்டாது என்று மிகச்சிறந்த இரசிகமணி ஒருவர் சொக்கிச் சொல்வது அனுபவிக்கத்தக்கது.

            மனித வர்க்கத்திற்குஅமுதம் ஈந்தகம்பநாடன், தனது உணர்ச்சிக் கடலின் மடையைத் திறந்துவிட்டுக் காட்டும் ஓர் இடத்தில் ஒரு பாடலைப் பார்ப்போம்.

            இராமன் காட்டுக்கு ஏகுமுன், பெற்ற தாயான கோசலையிடம் விடைபெற வருகிறான். முதலில், பரதன் நாடாளப்போகும் செய்தியைக் கூறுகிறான். கோசலை மகிழ்கிறாள். அடுத்து, தான் காடேகப் போகும் செய்தியைக் கூறுகிறான். கேட்டதும் கோசலை ஆறாத்துயரத்தில் ஆழ்கிறாள். இராமன் தாய்க்குத் தேறுதல் கூறுகிறான்.

            இந்த இடத்தில் காவிய நாயகனான இராமன் வாய்ச்சொல்லாக, கம்பன் பாடும் ஒரு பாடல் இதோ:

                        சிறந்த தம்பி திருவுற எந்தையை

                         மறந்தும் பொய்யிலனாக்கி வனத்திடை

                         உறைந்து பேரும் உறுதிபெற்றேன், இதின்

                         பிறந்துயான் பெறும் பேறென்பதியாவதோ?”



            மறத்தைத் தோற்கடித்து, அறத்தைக் காப்பதற்காகத் தோன்றிய யுக நாயகனான இராமன்,‘நான் பிறந்ததில் அதைவிடப் பெரும்பேறு வேறு இல்லைஎன்கிறான். அந்தப் பேறு குறிப்பிட்ட மூன்று காரியங்களைச் செய்வது என்கிறான். தம்பியை அரசாள வைப்பது, தந்தை வாக்கைக் காப்பது, காடாண்டு மீள்வது - இம்மூன்று கடமைகளே தன் வாழ்க்கைப்பேறு என்றுஅறத்தின் மூர்த்தியானராமனைச் சொல்ல வைக்கிறான் கம்பன்.



            உழைப்பால், ஒழுக்கத்தால், உதவியால், பண்பால்,‘சிறந்த தம்பிகள்சகல செல்வங்களையும் ஆண்டு அனுபவிக்க விடவேண்டும். முந்தையோர் அறம் - வாழையடி வாழையாக வளர்ந்துவரும் சமுதாயம் மெய்யறம் பொய்படாது இடை முறியாது, காப்பாற்றப்பட வேண்டும். நல்ல காரியத்திற்கு ஏற்படும் நானூறு இடைஞ்சல்களையும் உறுதியோடு தாண்டிச் செல்லுதல் வேண்டும்.

            உணர்ச்சிக் கடலான கம்பன்,“வேறு குழுவையெல்லாம் மானுடன் வெல்லப்பிறந்த இராமனாக நின்று, வாழ்க்கைக் குறிக்கோளை, தன்னேரில்லாத இயல்போடு பாடுகிறான், இங்கு.

Comments

Popular posts from this blog

தொல்காப்பியரின் அறிவியல் பார்வை - பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்