உலகமயமாக்கல் பின்னணியில்
பண்பாடும், வாசிப்பும்
தொ. பரமசிவம்
(மதுரை மூன்றாவது புத்தகத்திருவிழாவில் ஆற்றிய உரை)
“உலகமயமாக்கலில் பண்பாடும்; வாசிப்பும்” என்னும் தலைப்பை கொடுத்திருக்கிறார்கள். புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது. ஒரு செடியில் வேருக்கும் விழுகும் உள்ள தொடர்பு போன்றது புத்தங்களும் வாசிப்பவனுக்கும்உள்ள தொடர்பு.
புத்தகங்களின் மீது சமூகம் நடந்து போகிறது: நடந்து போவது என்றால் எழுதியவனின் மனநிலையை நாம் உணர்ந்து கொள்வது. எனக்கு, இங்கு வந்து பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. சில ஊர்களில் சந்தை என்று போட்டிருப்பார்கள்; இங்கு புத்தகத் திருவிழா என்று போட்டிருக்கிறார்கள.; “திருவிழா என்பது கொண்டாடப்பட வேண்டியது அதேபோல் புத்தகங்களும் கொண்டாடப்பட வேண்டியவை.
உலகமயமாக்கல் என்ற சொல்லே எனக்குப் புரியவில்லை.உலகை எப்படி மயமாக்குவது? மதுரையை எப்படி மதுரை மயமாக்குவது? மதுரையை வண்ணமயமாக்க வேண்டும:; ஒளி மயமாக்க வேண்டும் என்று சொல்லுங்கள் புரிகிறது! ஆனால், உலகமயமாக்கம் என்ற சொல்லே நமக்குப் புரியவில்லை. நம் ஆட்சியாளர்கள் நமக்கு அளித்த நன்கொடை இது. இவர்கள் ஏதோ சொல்ல வருகிறார்கள். அதில் ஒரு நுண் அரசியல் இருக்கிறது. நான் கட்சி அரசியலைச் சொல்லவில்லை.
சந்தை என்பது வாங்குவதற்கான இடமே தவிர, அங்கு மனித உறவுகள் மலராது. சிறைச்சாலைகளில் கூட மனித உறவுகள் மலரும். மருத்துவமனைகளில் கூட மனிதஉறவுகள் மலரும். நான் ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்தேன். பக்கத்து அறையில் இருந்தவர்களெல்லாம் நண்பர்களாகிவிட்டார்கள். ஆனால் சந்தையில் “அஞ்சலால் விற்றால் லாபம் என்றால், அஞ்சலால் விற்போம். நஞ்சை விற்றால் லாபம் என்றால், நஞ்சை விற்போம்” இது சந்தையின் தன்மை.
உலகமயமாக்கலை இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள்; அறிஞர்கள் எதிர்க்கிறார்கள். என்னைப் போன்ற பண்பாட்டு ஆய்வாளர்களும் எதிர்க்கிறோம். ஏனென்றால் இது ஒரு பண்பாட்டு படையெடுப்பு. நமது பண்பாட்டை குலைப்பதற்கான முயற்சி. இதை பண்பாட்டுத் தாக்குதல் என்றும் கூறலாம்.
பண்பாடு என்பது பொருள்உற்பத்தியும் தொடங்குகிறது. ஒரு குழந்தை, இலையில் தனக்கான பிப்பீயை செய்துகொள்கிறது. தனக்கான வண்டியை செய்துகொள்கிறது. தனக்கான காகிதப் பையை செய்துகொள்கிறது. இப்படி தனக்கான செய்து கொள்கிறபோதுதான் கலாச்சாரம் பிறக்கிறது. பொருள் உற்பத்தியில்தான் உறவுகள் மலரும். பொருள் உற்பத்தி செய்கிற போது மனிதன் கலாச்சாரம் உடையவனாகிறான். அது வாடுகிற போது கலாச்சாரமும் செத்துப் போய் விடுகிறது. உலகமயமாக்கம் என்ற பெயரில் இவர்கள் உலகையே சந்தையாக முயல்கிறார்கள். சந்தையில் எதை விற்றால் லாபம் கிடைக்கும் என்பதைத்தான் பார்ப்பார்கள். அங்கு மனிதர்களின் உணர்வுகளுக்கு இடமிருக்காது.
மரபுவழியான அறிவுச் செல்வத்தை திட்டமிட்டு கொள்ளையடிப்பது உலகமயமாக்கம். இதைத்தான் மார்க்ஸ் “தொகுக்கப்படாத விஞ்ஞானம்”என்றார். நம்முடைய பாரம்பரிய மருத்துவ அறிவுகளைக் கொள்ளையடிப்பது உலகமயமாக்கம். கால்ல புண்ணு வந்தா மஞ்சளையும் வெங்காயத்தையும் அரைச்சு போடுவோம். இனி எதாவது ப்ரெஞ்ச் கம்பெனியோ, கனடா கம்பெனியோ மஞ்சள், வெங்காயத்தை எல்லாம் நான்தான் கண்டுபிடித்தேன் காப்பிரைட் வாங்கி வச்சுகிருவான். அப்புறம் வெங்காயம், மஞ்சள பயன்படுத்த நான் அவனிடம் அனுமதி கேட்கணும்; பணம் கட்டணும். இப்படி மரபுரீதியான அறிவுச் செல்வத்தை திட்டமிட்டே கொள்ளையடிக்கிறார்கள். அறிவு என்பது 19ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழிற்புரட்சியின் கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. நமக்கு அறிவு பற்றிய சரியான பார்வை இல்லை.
பி.எஸ்.சி ரசாயனம் படிக்கும் மாணவனை பார்த்து ரசாயனம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என கேட்டேன். அவனுக்கு தெரியவில்லை. சொல்லிக் கொடுத்தால்தானே அவன் சொல்வான். மனிதன் வேட்டையாடியபோது உணவு மீதம் ஆகி டிஹைட்ரேட் ஆகி பயன்படுத்தலாம் என்ற போதே ரசாயனம் தொடங்கிவிட்டது. அதில் உப்பைச் சேர்க்கும்போது இன்னும் கொஞ்சநாள் பயன்படுத்தலாம் என்ற இரசாயணம் வளரத் தொடங்கியது.
மனிதகுல வரலாறு தெரியாத கல்வி முறையில் வளரும் இன்றைய தலைமுறையில் பண்பாடு பற்றி பேசுவதெல்லாம் பைத்தியகாரத்தனம். உலகமயமாக்கம், உலகமயமாக்கம் என்று சொல்லி சொல்லியே நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
“எல்லா பிரமாண்டங்களும் மனித விரோதமானவை. ஜனங்களின் வாழ்வுக்கு பிரம்மாண்டம் தேவையில்லை. பிரம்மாண்டங்களுக்கு எதிரான கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும். 60 மாடி 70மாடின்னு கட்டடம் கட்டுகின்றபோதுதானே பின்லேடன் வர்றான். உலக அறிவுச் செல்வங்களைக் கொள்ளையடிக்கவே உலகமயமாக்கம் பயன்படுகிறது. ஆப்பிரிக்காவில் உள்ள காடுகளிலும், கடற்கரையோரங்களிலும் இருந்த தாதுக்களைக் கண்டுபிடித்து கொள்ளையடிக்கிறார்களே அதுதான் இன்ஃபர்மேஷன். இதுதான் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி எதற்கும் பயன்படாத தேரிக்காடு அங்கே கல்லும் முள்ளும் ஓணானும் குடிகொண்டு இருக்கும். அங்கே தோரியம் இருக்குன்னு சொல்றானே அது இன்பர்மேஷன். அங்கே பெரிய கம்பெனிக்காரன் வரானே அது உலகமயமாக்கம்.
எல்லா இடத்திலும் கையை வச்சுட்டு இப்ப சமையலுக்குள்ளேயே வந்து கைய வச்சுட்டாங்க. பீட்ஸான்னு ஒரு இத இப்ப திங்க கொடுக்கிறாங்க. அதுல என்னா இருக்குன்னு நமக்கு தெரியுமா? நம்ம வீட்ல செய்த பண்டத்துல என்ன இருக்குன்னு என்று நமக்கு தெரியும். “உணவெனப்படுவது விலக்கொடு உயிரே”நம்ம உணவுச் செல்வங்களை இன்னொருத்தன் கொள்ளையடிக்கிறானே அது உலகமயமாக்கம். நிலத்தையும் உணவையும் கூட காக்க முடியாத சமுதாயம் வாழ்வதற்கு லாயக்கில்லாதது. திருமலைநாயக்கர் மகாலும் மீனாட்சியம்மன் கோயிலும் மட்டும் நமது முன்னோர்கள் சேர்த்துவைத்த சொத்து அல்ல. தூய நீரும், காற்றும் நமது சொத்து இல்லையா? எதை வேண்டுமானாலும் விற்கலாம் என்பது தான் உலகமயமாக்கம்.
ஒன்றைத் திட்டமிட்டே பழசாக்குவது உலகமயமாக்கம். இந்த வருடம் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கினால் அடுத்த வருடம் ஒரு சின்ன மாற்றத்துடன் புதிதாக ஒன்று வரும். இப்படி திட்டமிட்டு பழசாகி அடுத்த பொருளை விற்பதுதான் உலகமயமாக்கம். எல்லாவற்றையும் சந்தைப்படுத்தி கொண்டிருக்கும் போது நாம் இந்த ஏமாளிகள் தான் பண்பாடு பற்றி பேசுவது எல்லாம் முட்டாள் தனம். பண்பாடு பற்றிப் பேசுவதே நம் ஏமாளிதனத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்காகதான்.
உலகமயமாக்கம் எழுத்து உலகத்தில் என்ன மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது எனப் பார்ப்போம். சென்னை புத்தக திருவிழாவில் 10 லட்சம் புத்தகம் விற்றுள்ளது என சொன்னார்கள். மகிழ்ச்சி! மனிதன் வாசிக்க தொடங்கிவிட்டான். வாசிக்கும் மனிதன்தான் யோசிக்கிறான். சமூகம் மாற்றம் அடையத் தொடங்கியது எனப்பார்த்தால் மாற்றம் ஏதுமில்லை. ஏனென்றால் பாதிக்குப் பாதி வாஸ்து புத்தகங்கள்தான் விற்றுள்ளன. இங்கு இப்பொழுது விற்கும் புத்தகங்களை விட பல மடங்கு குருபெயர்ச்சிபலன் புத்தகம் வித்திருக்கும். குருவே வருஷம் வருஷம் இடம் பெயருகின்கிறார் என்றால் நீ உன் சிந்தனையில் இடம்பெயர் கூடாதா?
மாறுதல் ஒன்றே மாறாதது 15 வருசமா அப்படியே இருக்கீங்கன்னு சொன்னா அது உண்மையில்லை. முடி லேசா நரைச்சுருக்கும். வழுக்கை கூடியிருக்கனும். அப்படியே எதுவும் இருக்க முடியாது. மாற்றங்களை உருவாக்குவது புத்தகங்கள். மார்க்சிம் கார்க்கியின் தாய் காவியம் போன்ற புத்தகங்கள் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியவை. அறிந்தும் அறியாமலும் படித்த புத்தகங்கள்தான் நமக்குள் ஒரு மாற்றம் ஏற்பட உதவுகிறது. அதென்ன அறியாமல் படித்த புத்தகம்? கொல்லைப்பக்கம் போட்ட தக்காளி திடீர்ன்னு செடியா முளைப்பது போல. நாம் தெரியாமல் இப்படி வாசித்த புத்தகங்கள் தான் அறியாமல் படித்த புத்தகங்கள்.
மனித மனதில் விழும் விதைகள் முளைக்கத் தவறுவதே இல்லை. நான் எங்க ஊர் மாவட்ட நூலகத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஒரு புத்தகம் எடுத்தேன். அது சரித்திரத்தை மாற்றிய “அங்கிள் டாம்” புத்தகம் என்று தெரியாமல் அதன் குழந்தை பதிப்பின் தலைப்பைப் பார்த்து எடுத்தேன். மாமாவின் கதை. இந்த புத்தகத்தை இப்பொழுது காணவே முடியவில்லை. நாம் அடிமையாகவே இருக்க சம்மதித்து விட்டோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவரின் வரியை படிக்கும்போது அங்கிள் டாம் புத்தகம் ஞாபகம் வரும். மேல்மண், கீழ்மண் ஆவதும், கீழ்மண், மேல்மண் ஆவதும் வரலாறு. புரட்சியை ஒரு புத்தகம் எப்பொழுதும் ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கிறது.
இப்பொழுது சிலர் தினமும் ஒரு புத்தகம் எழுதுகிறார்கள்; என்ன செய்யிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என ஒரு வரியில் அப்போதிருந்த சாதி கோட்பாடுகளை உடைத்த வள்ளுவரிடம் இந்த கலகக் குரலை விடவா இனி எழுத முடியும்? எழுத்துல எதிர்ப்பு இருக்கலாம்; கலகக் குரலாய் எழுதலாம்; ஆனால், வெறுப்பு இருக்கக் கூடாது. இப்ப எழுதும் சிலரின் எழுத்த வாசிச்சா வெறுப்புதான் முழுமையாக வெளிப்படும். கோவம் வரலைன்னா அவன் மனுசனே இல்ல. கடவுள் பற்றி இருக்காரா, இல்லையான்னு எழுதலாம்; பேசலாம். எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணத்தினால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை; மற்றொன்று பொறாமை.இதற்கு மருந்தே கிடையாது.
எதை வேண்டுமானாலும் எழுதலாம். யாரைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற தைரியத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது? உலகமயமாக்கம் எல்லாவற்றையும் சந்தைப்படுத்த முயல்கிறது. என்னிடம் வந்து ஒரு இளங்கவிஞர் மழை பற்றிய கவிதைத் தொகுப்புக்குத் தலைப்பு கேட்டார். “தீங்கின்றி நாடெல்லாம்” என்று சொன்னேன். மழையைப் பார்த்தால் ஒவ்வொரு சமயமும் ஒரு வித்தியாசம் காட்டும். ஒரிசா வெள்ளத்தைப் பார்த்தால் புரியும் “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி” எனும் வரி. அதைப்போல தண்ணீர் இல்லாமல் தவிக்கிறப்ப தெரியும் “நீரின்றி அமையாது” என்னும் வரி.
வாசிப்பது மூலம் யோசிக்கிறான். யோசிப்பதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறான். உலகமயமாக்கலில் எல்லாவற்றையும் சந்தைப்படுத்துகிறோம். திருக்குறளை மட்டுமல்ல் திருவள்ளுவரையே சந்தைப்படுத்துகிறோம். இன்று எல்லாவற்றையும் விற்க தொடங்கிவிட்டோம். நுகர்வு கலாச்சாரம் ரொம்ப பெருகிவிட்டது. முன்பெல்லாம் வீட்டில் ஒரு சோப்பு இருந்தது. இப்ப ஆறு பேர் இருக்கிற வீட்டுல ஏழு சோப்பு இருக்குது. வெளிநாட்டு கம்பெனி எல்லாம் ஒனக்கு ஒன்னும் தெரியாது நான் குடுக்கிறேன்; இத சாப்பிடுன்னு சொல்றான். அதுவும் நம்ம மதுரைல சொல்லலாமாங்க. தினம் ஒரு கண்டுபிடிப்பை, கண்டுபிடிக்கிற ஊரு. போன்டாக்குள்ள முட்டைய வைச்சு கண்டுபுடிச்ச ஊரு. கென்டகி சிக்கன் ஒரு கம்பெனி; நான் கோழிக்கறி தர்றேன். அத சமைன்னு சொல்றான். நம்ம ஊருல நம்ம பொண்ணுகளுக்கு கோழிக்கறி சமைக்கத் தெரியாதா?
உலகமயமாக்கம், உலகமயமாக்கம் என்ற சொல்லிலேயே நாம் ஏமாந்து போகிறோம். “மெய்ப்பொருள் காண்பது அறிவு” யார் என்ன சொன்னாலும் இந்த நுகர்வு கலாசாரத்திலிருந்து நாம் விடுபடவேண்டும். இப்ப கடன் திருவிழா, லோன் மேளா எல்லாம் நடத்துறாங்க. இந்தத் திருவிழாவுக்கு எப்ப கொடி ஏத்துவாங்க? எப்ப இறக்குவாங்கனு தெரியல. எந்த நாடும் உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்ததாக வரலாறு இல்லை.
“மாற்ற முடியாதது எதுவோ அதுஅறம். மாற்றம் வந்தாலும் அதிக மாறுதல் வராதது பண்பாடு”. உலகமயமாக்கல் என்ற ஆரவாரத்திற்கு நாம் ஏமாந்து போகிறோம். நாம் தினமும் பங்குச்சந்தை பார்க்கிறோம். எனக்கு என்னவென்றே புரியவில்லை. இப்ப தான் தெரிந்தது; அது இரண்டு சதவீத மக்களுக்கான செய்தி என்று. நாம் பிரம்மாண்டங்களுக்கு எதிரான கலாசாரத்தை உண்டுபண்ண வேண்டும். நாயகம் ஜனங்களின் நாயகமாக இருந்தால், அது ஊடகங்களின் நாயகமாக இருக்க முடியாது. ஒரு நாள் அறிஞனை முட்டாளாகக் காட்டும்.
பண்பாடுபற்றியெல்லாம் வாசிக்கிறவங்க குறைவு. இதைப்பற்றி யோசிக்கிறவங்க ரொம்ப குறைவு. பேசுறவங்க குறைவு. எழுதுறவங்க ரொம்ப குறைவு. எனக்கு ஒரு இங்கிலீஸ் படம் ஞாபகத்துக்கு வருது. ஆண்டவர் கொடுத்த பல கட்டளைகளை மோசஸ் தொலைத்து விட்டு கடைசியாக உள்ளவற்றை தான் கடவுள் கொடுத்தார் என சாதிப்பார். அதுபோல, நாம் எதை இழந்தோம் என்பதைக்கூட மறந்துவிட்டோம். “இழந்தோம் என்பதைவிட இழக்கப்படுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருக்கிறோம்” என வருத்தப்படுகிறார் ஆழ்வார். இதை பாரதி “கஞ்சி குடிப்பதற்கு வழிஇலார், அதன் காரணம் ஏதும் என்று அறியிலார்” என்கிறார்.
இறுதியாக வாசிப்பு என்பது யோசிப்பைத் தரும். யோசிப்பது மூலம் சமூக மாற்றம் ஏற்படுத்த வேண்டும். நாம் யோசிப்பதன் மூலம் ஜனங்களின் நிலையை மாற்ற வேண்டும். பாரம்பரியமான அறிவுச் செல்வத்தை நாம் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டும். எதையும் விற்கலாம், ஒன்றைத் திட்டமிட்டுப் பழசாகி புதியதை சந்தை படுத்தலாம் என்பது போன்ற பிரம்மாண்டகளுக்கு எதிராக சிந்திக்கும் கலகக்குரல் நமக்கு வேண்டும். பண்பாடு என்பதை பற்றிய விழிப்புணர்வு நமக்கு வேண்டும்.
Comments
Post a Comment