நன்னூல் - நூற்பா

                                                                        நன்னூல் 

                                            ஆசிரியர் : பவணந்தி முனிவர்.



 பாடஞ்சொல்லலின் வரலாறு

ஈதல் இயல்பே இயம்பும் காலைக்
காலமும் இடனும் வாலிதின் நோக்கி
சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக்
கோட்டமில் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப (36)

 மாணாக்கனது வரலாறு

தன்மகன் ஆசான் மகனே மன்மகன்
பொருள் நனி கொடுப்போன் வழிபடுவோனே
உரைகோளாளற்கு உரைப்பது நூலே (37)

அன்னம் மாவே மண்ணொடு கிளியே
இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலை இடை கடை மாணாக்கர் (38)

களிமடி மானி காமி கள்வன்
பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் தொன்னூற்கு அஞ்சித்
தடுமாறு உளத்தன் தறுகணன் பாவி
படிறன் இன்னோர்க்கு பகரார் நூலே (39)

 

கோடன் மரபே கூறும் காலைப்
பொழுதொடு சென்று வழிபடன் முனியான்
குணத்தொடு பழகி அவன் குறிப்பிற் சார்ந்து
இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப்
பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்
சித்திரப் பாவையின் அகத்தகவு அடங்கிச்
செவி வாயாக நெஞ்சு களனாகக்
கேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்து
போவெனப் போதல் என்மனார் புலவர் (40)

 

நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல்

பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்து அவை அமைவரக்கேட்டல்
அம்மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடநனி இகக்கும் (41)

ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின்
பெருக நூலிற் பிழைபாடு இலனே (42)


முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும் (43)


ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்
காற்கூறு அல்லது பற்றலன் ஆகும் (44)


அவ் வினையாளரோடு பயில்வகை ஒருகால்
செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்
மையறு புலமை மாண்புடைத்து ஆகும் (45)

அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி
நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமொடு
எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறம்
அறத்தின் திரியாப் படர்ச்சி வழிபாடே (46)

 

Comments

Popular posts from this blog