நன்னூல் - விளக்கம்
நன்னூல்
(ஆசிரியர்: பவணந்தி முனிவர்)
விளக்கம்
கற்பிக்கும் முறை
பாடம் சொல்லும் முறை பற்றி குறிப்பிடும்பொழுது, சொல்லிக் கொடுப்பதற்கான சரியான
நேரத்தையும், இடத்தையும் தேர்ந்தெடுத்து சரியான முறையில் இருந்து சொல்லிக்கொடுக்க வேண்டும்.
கற்பிக்க தொடங்கும் முன் தான் விரும்பி வணங்கக்கூடிய கடவுளை நினைத்து வணங்கி, எதைச்
சொல்லிக்கொடுக்கப் போகிறோமோ அப்பாடப்பொருளை எப்படி எல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்
என்பதை மனதில் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பின்பு, பாடத்தை வேகமாக இல்லாமல் நிதானமாக
எடுக்க வேண்டும். மாணவர்கள் மீது கோபம் கொள்ளாமலும் அன்புடனும் முகமலர்ச்சியுடனும்
மாணவர்களின் உள்வாங்கிக் கொள்ளும் தன்மையை அறிந்து அவர்களது மனதில் பதியும்படி தெளிவான
மனநிலையுடன் கற்பிக்கவேண்டும். (நூற்பா எண் - 36)
ஒரு ஆசிரியர் தனது மகனுக்கும், தனது ஆசிரியரின் மகனுக்கும், அரசனது மகனுக்கும்,
அதிக பொருட்களைக் கொடுத்தேனும் பாடம் கற்க எண்ணுவோனுக்கும், தன்னை வழிபடுவோனுக்கும்,
தன்னால் கற்பிக்கப்படுவனவற்றை விரைவாகக் கற்றுக் கொள்ளும் அறிவுடையோனுக்கும் நூல் பொருளைக்
கற்பிக்கலாம். (நூற்பா எண் - 37)
மாணவர்களின் இலக்கணம்
மாணவர்களை மூன்று வகையாக வகைப்படுத்தலாம்.
1. தலை மாணாக்கர் - அன்னப்பறவையும் பசுவையும் போன்ற மாணவர்கள்
2. இடை மாணாக்கர் - மண்ணையும் கிளியையும்
போன்ற மாணவர்கள்
3. கடை மாணாக்கர் – ஓட்டைக்குடம், ஆடு,
எருமை, நெய்யரி போன்றவர்கள்.
(நூற்பா
எண் - 38)
தலை மாணாக்கர் - இரண்டு வகை
அன்னம் : பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை
மட்டும் பிரித்துக் குடிக்கும் திறமையுடையது அன்னப்பறவை. அதுபோல், ஆசிரியர் கூறுவனவற்றுள்
தனக்கு வேண்டியவற்றை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்ளும் தன்மையுடையவர்கள் அன்னமாகிய
தலை மாணாக்கர்கள்.
பசு : பசு, புல் நிறைந்த இடத்தைக் கண்டால் அங்கு
நிறைந்திருக்கும் புல்லை வயிறு நிறைய மேய்ந்த பின்பு ஓரிடத்தில் அமர்ந்து மேய்ந்த புல்லை
திரும்பவும் வாய்க்கு வரவைத்து அசைபோட்டு விழுங்கும். அதுபோல், ஆசிரியர் பாடம் நடத்தும்
பொழுது அவர் கூறும் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு பின்பு தனியாக இருக்கும் பொழுது
ஆசிரியர் கூறியனவற்றைத் நினைவில் கொண்டுவந்து சிந்திப்பவர் பசுவாகிய தலை மாணாக்கர்.
இடை மாணாக்கர் - இரண்டுவகை
மண் : மண், உழவர் கடினமாக உழைத்துப் பயிர் செய்த
பயனைக் கண்முண் காட்டுவதுபோல, ஆசிரியர் வருந்தி கற்பிக்கும் முயற்சியின் பயனை மட்டுமே காட்டக்கூடிய மாணவர்கள் மண்ணாகிய இடை மாணாக்கர்கள்.
இல்லிக்குடம் : ஓட்டை விழுந்த குடம் அதனுள் ஊற்றும்
நீரை உள் வைத்துக் கொள்ளாது வெளியேற்றுவது போல ஆசிரியர் கூறியவற்றை கேட்டுக் கொண்டிருந்தும்
எதுவும் நினைவில் கொள்ளாமல் மறந்துவிடும் குணமுடைய மாணவர்கள் இல்லிக் குடமாகிய கடை
மாணாக்கர்கள்.
ஆடு : ஆடு ஒரு செடியில் தழை நிறைந்து இருந்தாலும்
அதனை முழுமையாக உண்ணாமல் அரைகுறையாக நுனிப்புல் மேய்ந்துவிட்டு வேறு செடிகளில் சென்று
மேய்வது போன்று நிறைந்த அறிவுடைய ஆசிரியர் ஒருவரிடம் முழுமையாக இருந்து கற்காமல் பலரிடமும்
சென்று கற்கும் தன்மையுடைய மாணவர்கள் ஆடாகிய கடை மாணாக்கர்கள்.
எருமை : சுத்தமான நீர் நிறைந்த குளத்தில் எருமை
நீரைக் கலங்கச் செய்து நீர் குடிப்பது போல் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரை வருந்தச்
செய்து பாடம் கேட்கும் மாணவர்கள் எருமையாகிய கடை மாணாக்கர்கள்
நெய்யரி (பன்னாடை) : பன்னாடை தேன் பால் முதலியவற்றை
வடிகட்டி சுத்தமானவற்றை கீழே விட்டுவிட்டு கசடுகளை மட்டும் தன்னிடத்தில் இருத்திக்
கொள்வது போல் ஆசிரியர் கூறும் பலவற்றின் சரியான பொருளை விட்டுவிட்டு தவறான பொருளை சிந்தித்துப்
புரிந்து கொள்ளும் மாணவர்கள் நெய்யரியாகிய கடை மாணாக்கர்.
மாணவர் ஆகாதவர் இலக்கணம்
கள் போன்ற போதைப் பொருட்களை விரும்பி போதையில் திளைக்கும் தன்மையுடையவனும்,
சோம்பேறியாக இருப்பவனும், தலைக்கணம்(கர்வம்) உடையவனும், காம இன்பத்தை விரும்புபவனும்,
திருடனாக இருப்பவனும், நோயாளியாக இருப்பவனும். அறிவுக்குறைபாடு உடையவனும், எது சொன்னாலும்
அதற்கு எதிராகப் பேசும் தன்மையுடையவனும், மிகுந்த கோபம் உடையவனும், மிகுதியாகத் தூங்கிக்
கொண்டே இருப்பவனும், புத்திக்கூர்மை இல்லாதவனும், பழமையான பாடநூல்களைக் கண்டு அஞ்சும்
பயந்த உள்ளத்தை உடையவனும், பயப்படவேண்டியவற்றிக்குப் பயப்படாத தன்மை உடையவனும், பாவம்
செய்பவனும், பொய் பேசுபவனும் ஆகிய மேற்கூறப்பட்ட அனைவரும் கல்வி கற்பதற்கு தகுதியற்றவர்களாவர்.
இவர்களுக்கு ஆசிரியர் பாடம் கற்பிக்க மாட்டார். (நூற்பா
எண் - 39)
பாடம் கேட்கும் முறை
மாணவனாக இருந்து பாடம் கேட்கும் முறை என்னவென்றால் ஆசிரியர் சொன்ன நேரத்திற்குச்
சென்று ஆசிரியருக்கு மரியாதை செலுத்துவதில் வெறுப்புக் கொள்ளாமல் நல்ல குணத்துடன் பழகுதல்
வேண்டும். ஆசிரியரின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும். ஆசிரியர் குறிப்பிடும் காலம்வரை
இருத்தல் வேண்டும். ஆசிரியர் படிக்கச் சொல்வனவற்றை படிக்கவும் கூற கேட்பவற்றை கூறவும்
வேண்டும். பசித்தவன் உணவு உண்ணுவதில் கொண்டுள்ள விருப்பத்தை போன்று பாடத்தை கேட்பதில்
ஆர்வம் உடையவனாக இருத்தல் வேண்டும். ஆசிரியர் பாடத்தை சொல்லும்பொழுது ஓவியத்தில் உள்ள
உருவங்களைப் போன்று மனதாலும் உடலாலும் விலகாமல் பாடத்தில் கவனமாக இருக்கவேண்டும். காதானது
வாயாகவும் மனதானது கொள்ளும் இடமாகவும் கொண்டு ஆசிரியரிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்டு
அவற்றை மறவாமல் மனதில் நிறுத்தி ஆசிரியர் போகச் சொல்லும் பொழுது விடைபெற வேண்டும். (நூற்பா எண் - 40)
நூலினைப் படிக்கும் முறை
ஒரு நூலின் பாடத்தினை ஒருமுறை கேட்பதைக்
காட்டிலும் இரு முறை கேட்டால் அந்த நூலைப் புரிந்து கொள்வதில் ஏற்படும் பிழை குறையும். (நூற்பா எண் - 42)
மூன்று முறை கேட்டால் ஆசிரியர் கற்பித்தது போன்றே தானும் பிறர்க்குக் கற்பிக்கும் திறனைப் பெறுவான். (நூற்பா எண் - 43)
ஒருவன் ஆசிரியர் சொன்னவற்றை முழுமையாகக் கேட்டாலும் அதில் காற் பங்கு அறிவே கிட்டும். (நூற்பா எண் - 44)
அதுவே, கற்பவர்களோடு சேர்ந்து கற்கும் பொழுது ஒரு காற்பகுதி அறிவும், நூலை எடுத்துக் கூறும் பொழுது அரைப்பங்கு அறிவையும் பெறுவதன் மூலம் அந்நூலைக் கற்றல் முழுமைபெறும். (நூற்பா எண் - 45)
குளிர் காய்பவன் எப்படித் தீயிடம் இருந்து விலகிச் செல்லாமலும் மிகவும் நெருங்கிச்
செல்லாமலும் இருந்து குளிர் காய்கின்றானோ அதுபோல ஆசிரியரைக் கண்டு அஞ்சி விலகிச் செல்லாமலும்
மிகவும் நெருங்கி விடாமலும் நிழல் போன்று பின்தொடர்ந்து சென்று அன்பு நிறைந்த மனத்துடன்
பழகி எவ்வாறு நடந்து கொண்டால் ஆசிரியர் மகிழ்வாரோ அவ்வாறு அறத்திலிருந்து விலகாமல்
நடந்துகொண்டால் அதுவே மாணவர் ஆசிரியருக்குச் செய்யும் வழிபாடாகும். (நூற்பா எண்
- 46)
Comments
Post a Comment